கோவில்பட்டி: கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி உத்திர பிரமேற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தென்பழனி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில், தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திர பிரம்மோற்சவ திருவிழாக்களில் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி நேற்று முன்தினம் ராஜா அனுக்கை, நேற்று தேவ அனுக்கை ஆகியவை நடந்தன. இன்று அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து கால சாந்தி பூஜை, உதய மார்த்தாண்ட பூஜை, சுப்பிரமணியர் பூஜை ஆகியவை நடைபெற்றன.
பின்னர் மூலவர் கழுகாசல மூர்த்தி சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடி மரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றன. பின்னர் மூலவர் கழுகாசல மூர்த்தி மற்றும் வள்ளி, தெய்வானை அம்மன்களுக்கு அபிஷேகங்களும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.
விழாவில் கோயில் செயல் அலுவலர் கார்த்தீஸ்வரன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இரவு 8 மணிக்கு சுவாமி அம்மன் பூஞ்ச மரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அருளுகின்றனர்.
தொடர்ந்து 13 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 6-ம் திருநாளான 7-ம் தேதி காளை வாகனத்தில் சோமஸ் கந்தரும், ஆட்டுக்கிடா வாகனத்தில் ஸ்ரீமுருகன், வள்ளி, தெய்வானையும் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
7-ம் திருநாளான 8-ம் தேதி மாலை 4 மணிக்கு சண்முக அர்ச்சனை நடக்கிறது. அன்றிரவு 8 மணிக்கு சுவாமி சிவப்பு மலர் சூடி சிவன் அம்சமாக வெள்ளி சப்பரத்திலும், நள்ளிரவு 12 மணிக்கு வெள்ளை மலர் சூடி பிரம்மன் அம்சமாக எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
9-ம் தேதி அதிகாலை சுவாமி பச்சை மலர் சூடி திருமால் அம்சமாக மலையை கிரிவலமாக வந்து, கோயிலை வந்தடைகிறார். 9-ம் திருநாளான 10-ம் தேதி காலை 10 மணிக்கு வைரத் தேரில் சுவாமி கழுகாசலமூர்த்தி, வள்ளி தெய்வானை, சட்ட ரதத்தில் விநாயகர் பெருமான் ஆகியோர் எழுந்தருளி தேரோட்டம் நடக்கிறது.
11-ம் தேதி தீர்த்தவாரியும், இரவு 8 மணிக்கு தபசு காட்சியும் நடைபெற இருக்கிறது. 12-ம் தேதி திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.
ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் கார்த்தீஸ்வரன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், சீர்பாத தாங்கிகள் செய்து வருகின்றனர்.