சென்னை: டிஎன்பிஎஸ்சி மற்றும் எம்ஆர்பி மூலம், பல்வேறு பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 621 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பால்வளத் துறை சார்பில் 64, கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் 166, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 391, என மொத்தம் 621 பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மற்றும் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் (எம்ஆர்பி) தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 13 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஏப்.4) வழங்கினார்.
தமிழக அரசின் 2025-26 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், 40,000 பணியிடங்கள் நடப்பு நிதி ஆண்டிலேயே நிரப்பும் பொருட்டு உரிய நடவடிக்கைகளை அரசு துரிதமாக மேற்கொள்ளும் என்ற அறிவிப்பிற்கிணங்க, தமிழக முதல்வர் இன்றையதினம் 621 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
பால்வளத் துறை: பால்வளத் துறை சார்பில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களில் பணிபுரிந்திட டிஎன்பிஎஸ்சி வாயிலாக இளநிலை செயற்பணியாளர் (அலுவலகம்) பணியிடத்திற்கு 29 நபர்கள், பால் அளவையாளர் நிலை-III பணியிடத்திற்கு 11 நபர்கள் மற்றும் முதுநிலை தொழிற்சாலை உதவியாளர் பணியிடத்திற்கு 24 நபர்கள், என மொத்தம் 64 நபர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக தமிழக முதல்வர் இன்றையதினம் 3 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
கைத்தறி மற்றும் துணிநூல் துறை: கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில், கோ-ஆப்டெக்ஸ் விற்பனை பிரிவில் பணி ஓய்வின் காரணமாக நிலவும் பணியாளர்கள் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யவும், கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் கைத்தறி ரகங்களின் விற்பனையை அதிகப்படுத்தும் நோக்கிலும், டிஎன்பிஎஸ்சி மூலம் 90 ஆண் பணியாளர்கள் மற்றும் 76 பெண் பணியாளர்கள், என மொத்தம் 166 உதவி விற்பனையாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக இன்றையதினம் 5 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை: மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் 74 இ.சி.ஜி. தொழில்நுட்ப வல்லுநர் , 44 இயன்முறை சிகிச்சையாளர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கும், டிஎன்பிஎஸ்சியால், 205 இளநிலை உதவியாளர் மற்றும் 68 தட்டச்சர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கும் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக இன்றையதினம் 5 நபர்களுக்கு தமிழக முதல்வர் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், ஆர். காந்தி, மா. சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், துறை செயலாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.