சென்னையில் இருந்து மாமல்லபுரத்துக்கு ஈசிஆர் சாலையில் சைக்கிளில் பயணித்து வந்த டிஜிபி சைலேந்திரபாபு, மாமல்லபுரத்தில் காவல் நிலையம் மற்றும் காவலர் குடியிருப்பில் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக காவல் துறை இயக்குநர் சைலேந்திரபாபு, முன்னறிவிப்பு ஏதுமின்றி நேற்று ஈசிஆர் சாலையில் சைக்கிளில் பயணித்து, மாமல்லபுரத்துக்கு வந்தார். மாமல்லபுரம் காவல் நிலையத்தில் ஆய்வுமேற்கொண்ட அவர், காவலர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.
பின்னர், காவலர் குடியிருப்புக்குச் சென்ற அவர், குடியிருப்பு வாயிலில் கைக்குழந்தையுடன் நின்று கொண்டிருந்த சந்திரகலா என்ற பெண்ணிடம் பேசினார். அப்போது, அந்தப் பெண் தனது கணவர் தணிகைவேல் கடந்த ஜனவரி மாதம் சாலை விபத்தில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார் என்றும். அரசால் வழங்கப்படும் பலன்களை விரைவில் வழங்க வேண்டும் என்றும் டிஜிபியிடம் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, காவல் துறை சார்பில் அனைத்து உதவிகளும் விரைவில் வழங்கப்படும் என்று டிஜிபி உறுதியளித்தார். மேலும், அங்கிருந்த குழந்தைக்கு புத்தகத்தை அன்பளிப்பாக வழங்கினார்.
பின்னர், மீண்டும் சைக்கிளில் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றார். டிஜிபி ஆய்வு காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆய்வின்போது, டிஎஸ்பி ஜெகதீசன், ஆய்வாளர் நடராஜன் உடனிருந்தனர்.