
பண்டைய இந்திய ஆய்வாளர்களில் குறிப்பிடத்தக்கவர் நயன்ஜோத் லாஹிரி. வரலாற்றாளர், தொல்லியல் ஆய்வாளர். சிந்து சமவெளி நாகரிகம் தொடங்கி அசோகர் வரை இவர் எழுதியிருக்கும் நூல்கள் பொது வாசகர்களின் கவனத்தையும் வெகுவாகக் கவர்ந்தவை. ஒரு கருத்தரங்குக்காகச் சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்தபோது அவரைச் சந்தித்து மேற்கொண்ட உரையாடலிலிருந்து சில பகுதிகள்…
சிந்து சமவெளி நாகரிகம் தொடர்ந்து நம்மை ஈர்த்துவருவது ஏன்? – சிந்து சமவெளி நாகரிகம் கண்டறியப்பட்ட செய்தியை இந்தியத் தொல்லியல் கழகத்தின் தலைவரான ஜான் மார்ஷல் 20 செப்டம்பர் 1924 அன்று ‘இல்லஸ்ட்ரேட்டட் லண்டன் நியூஸ்’ நாளிதழில் அறிவித்தார். இந்திய வரலாற்றை மாற்றியமைத்த இந்த முக்கியமான நிகழ்வு, நம் தொன்மத்தைப் பின்னுக்குத் தள்ளியதோடு, காணாமல் போயிருந்த (பொ.ஆ.மு.) 3000 ஆண்டுகால வரலாற்றை மீட்டெடுத்துத் தந்தது. இந்திய வரலாற்றுக்கு ஒரு புதிய தொடக்கப்புள்ளி இதன்மூலம் கிடைத்தது.