திருநெல்வேலி மாவட்டம் எட்டையபுரத்தில் பாரதி மண்டபம் அமைப்பதற்கு ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி பெருமுயற்சி எடுத்தார். இந்நிலையில், எட்டையபுரம் மகாராஜாவிடம் இதுகுறித்து ரசிகமணி டி.கே.சி. எடுத்துரைத்து பாரதி மண்டபம் அமைவதற்கான இடத்தைப் பெற்றார். ஆனால், அந்த இடமோ மழை பெய்தால் முழங்கால் அளவு மண்ணுக்குள் புதையும் இடமாக இருந்தது. அப்படிப்பட்ட இடத்தில் பாரதி மண்டபம் அமைக்கப்பட்டது. இதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், தமிழ் அறிஞர்களின் பங்களிப்பு, விழா எவ்வாறு நடைபெற்றது என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்…
எட்டையபுரம் பாரதி இலக்கிய மன்றத்தின் சார்பில் 1944 செப்டம்பர் மாதத்தில் டி.கே.சி. தலைமையில் நடைபெற்ற தமிழிசை விழாவில் ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டார். அம்மன்றத்தை ஆசிரியர் கே.பி.எஸ்.நாராயணன், எட்டையபுரம் ஜமீன்தாரின் மைத்துனர் அமிர்தசாமி ஆகியோர் நடத்தி வந்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு சென்னை திரும்பும் வழியில், கோவில்பட்டி ரயில் நிலையத்தில் ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தியிடம், ‘எட்டையபுரத்தில் பாரதி பெயரில் ஒரு நூல் நிலையம் அமைக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார்.
‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி சென்னை வந்தவுடன் ‘கல்கி’ இதழில் இதுகுறித்து எழுதி, பொதுமக்களிடம் நன்கொடை கோரினார். முதன்முதலாக மயிலாப்பூர் இளைஞர் கி.ரகுநாதன் ஐந்து ரூபாய்க்கான காசோலையை அனுப்பினார். அதேநேரம் இப்பணியை ஊக்குவிக்கும் வகையில் வேறு எங்கிருந்தும் நன்கொடைகள் வரவில்லை. கி.ரகுநாதன் அனுப்பிய நன்கொடை ஐந்து ரூபாயைத் திருப்பி விட்டு, ‘வேறு எங்கும் இப்பணிக்கு ஊக்கம் தரப்படவில்லை’ என்று மனவருத்தத்துடன் ‘கல்கி’ இதழில் திரும்பவும் கிருஷ்ணமூர்த்தி குறிப்பிட்டிருந்தார்.
ADVERTISEMENT
அவ்வளவுதான்! உடனே பணம் இமயம் முதல் இலங்கை வரை நன்கொடையாகக் கொட்டத் தொடங்கியது. கிட்டத்தட்ட 42 ஆயிரம் ரூபாய் கிடைக்கப் பெற்றது. அப்பணம் ‘பாரதி நினைவு நிதி’ என்று வங்கிக் கணக்கில் போடப்பட்டது. அதில் பத்தாயிரம் ரூபாய் பாரதியாரின் துணைவியாருக்கு ஆயுள் காலம் வரை உதவும் வகையில் வங்கியில் செலுத்தப்பட்டது. நன்கொடைப் பணம் அதிகம் கிடைக்கவே நூல் நிலையம் அமைத்தது மட்டுமல்லாமல், பாரதிக்கு ஒரு நினைவாலயமும் எழுப்ப வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
இந்த நினைவாலயத்தின் அமைப்பைக் கட்டிட நிபுணர் எல்.எம்.சித்தலே வடித்துக் கொடுத்தார். இந்த நினைவாலயம் எழுப்பும் பணியில் எட்டையபுரம் மகாராஜா, செய்தியாளர் தி.சுவாமிநாதன் ஆகியோர் ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்திக்கு உறுதுணையாக இருந்தனர்.
நினைவாலயம் அடிக்கல் நாட்டுவிழா குறித்து 1945 ஜூன் 10-ம் தேதியிட்ட ‘கல்கி’ இதழில் வெளியிடப்பட்ட செய்திக் கட்டுரை வருமாறு:
தினந்தோறும் பொழுது புலரத்தான் செய்கிறது; சூரியனும் உதயமாகின்றது. ஆனாலும், நாளது ஜூன் மாதம் மூன்றாம் தேதி சூரியோதயம் ஒரு தனி மகிமை பெற்று விளங்கிற்று. அந்த மகிமையை மற்ற இடங்களில் உள்ளவர்கள் கண்டார்களோ என்னவோ, தெரியாது. அன்று காலை எட்டையபுரத்தில் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் கூடியிருந்தவர்கள் நிச்சயமாய்க் கண்டார்கள். கண்டதோடு, ‘இது சாதாரணமாய்த் தினந்தோறும் உதயமாகும் சூரியன் அல்ல; தமிழ்நாட்டின் மகோன்னதத்தைப் பிரகாசிக்கச் செய்வதற்காகவே உதித்த தனிப்பெருமை வாய்ந்த சூரியன் என்பதாக அறிந்தார்கள்’ என்று கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அற்புதச் சுவை பொங்கும் இந்த வாக்கியங்கள் உயர்வு நவிற்சி போல் தோன்றக் கூடும். ஆனால், இவற்றைத் தொடர்ந்த வாக்கியங்கள் அறிவித்த செய்தி உண்மையில் அற்புதமாகவே இருந்தது. சுப்பிரமணிய பாரதியார் பிறந்த ஊரில் ‘கல்கி’ எடுப்பித்த புகழாலயத்துக்கு அடிப்படை அமைத்த செய்தி இது.
பத்தாயிரம் மக்களின் முன்னிலையில் அந்த அடிப்படை அமைப்பு (அடிக்கல் நாட்டு) விழா நடைபெற்றது. அதற்குத் தலைமை தாங்கும் பெருமையை, அப்போது ஆட்சியிலோ, கட்சியிலோ யாதொரு பதவியும் கொண்டிராத ஒருவருக்கு – தனிப்பெரும் மனிதரான ராஜாஜிக்கு அளித்திருந்தார் ‘கல்கி’.
பாரதியாரின் புதல்விகள் தங்கம்மாளும், சகுந்தலாவும் தத்தம் குழந்தைகளுடன் அவருடைய கவிச் சொற்களில் ‘முருகா, முருகா, முருகா’ என்று நாட்டைக் குறிஞ்சியில் கூட்டிசை பாடி, ‘வருவாய் மயில் மீதினிலே’ என வேண்டி அழைத்தார்கள். அதை அடுத்து பாரதியாரின் தேசிய கீதங்களில் ஒன்றான ‘பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி’ உதய ராகங்களில் ஒரு மாலிகையாய் ஒலித்தது. ‘பொழுது புலர்ந்தது’ எனப் பூபாளத்தில் தொடங்கிய அப்பாடல், அந்தப் பொன்னாளின் உதயத்தையே போற்றுவது போல் தொனித்தது. அந்த இரண்டு பாடல்களுக்கும் இடையே விழாவின் முக்கிய நிகழ்ச்சி நடைபெற்றது.
சிறுவன் சுப்பையாவாக பாரதியார் ஓடி விளையாடி இருக்கக் கூடியதான நிலத்தில், அவருக்கு நினைவாலயம் எழுப்புவதற்கான அடிக்கற்களை ராஜாஜி பதித்தார். அதுவும் எப்படி? தமக்கு இயல்பான அக்கறையுடன் எட்டையபுரம் மகாராஜா ஒவ்வொன்றாய் எடுத்துக் கொடுத்த செங்கற்களை ஒன்று விடாமல் ராஜாஜி அடுக்கி வைத்துச் சாந்து பூசினார். இப்போதே ‘கட்டிடத்தை கட்டி விடுவீர்கள் போலிருக்கிறதே!’ என்று சொல்லிக் கொண்டே அவருக்குக் ‘கல்கி’ மாலை அணிவித்தார்.
நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள அந்தக் கட்டிடத்துக்கான மனையை, டி.கே.சி.யின் துணையுடன் ‘கல்கி’ தேர்ந்தெடுத்திருந்தார். அதை எட்டையபுரம் மகாராஜா விலைக்கு வாங்கி, இனாம் சாசனம் செய்து கொடுத்திருந்தார். ‘காணி நிலம் வேண்டும்’ என்று பராசக்தியை வேண்டிப் பாடினாரே பாரதியார், கிட்டத்தட்ட அந்த அளவு கொண்டதாய் இருந்தது மகாராஜா அளித்த மனை. அதனுடன் இணைந்தாற்போல் இருந்த நிலத்தை வாங்கி, மனையின் மொத்த அளவை ஒரு காணிக்குக் கூடுதலாகவே ‘கல்கி’ விரிவுபடுத்தினார்.
அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிக்குப் பிறகு விழாப் பந்தலில் சொற்பொழிவுகள் நிகழ்ந்தன, ஏழு மணியிலிருந்து உச்சி வேளை வரை. ராஜாஜியின் முகவுரைக்கும், பேருரைக்கும் இடையே டி.கே.சி., மதுரை வைத்தியநாதய்யர், டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன், பாரதியாருக்குத் தோழராக இருந்த சோமசுந்தர பாரதி, அவருடைய மனைவியார், டாக்டர் சுப்பராயன், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, சுதந்திரப் போராட்ட வீரரும், நெல்லை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், அப்பழுக்கற்ற நேர்மையாளருமான சோமையாஜுலு முதலானோர் பேசினார்கள்.
மகாத்மா காந்தி அனுப்பிய வாழ்த்துச் செய்தி
விழாவுக்கு வாழ்த்துக் கூறி வந்திருந்த செய்திகளைப் பாரதி மண்டபத் திருப்பணியில் தொடக்கம் முதல் ‘கல்கி’க்குத் துணைபுரிந்த சதாசிவம், ராஜாஜியுடன் பகிர்ந்து கொண்டு வாசித்தார். அந்தச் செய்திகளில் ஒரே வாக்கியம் கொண்ட வாழ்த்துரை ஒன்று நீடித்த கரவொலியை எழுப்பிற்று. அந்த வாக்கியத்தைத் தம் கைப்படவே தமிழில் ஒரு பெரியவர் எழுதி ‘மோ.க.காந்தி’ என்று ஒப்பம் இட்டிருந்தார். இவ்வாறு கட்டுரையில் கூறப்பட்டிருந்தது.
மேலும், அந்த விழாவைப் பற்றிக் ‘கல்கி’ இதழில் வெளியான விமர்சனக் கட்டுரை ஒன்றில் ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தியே குறிப்பிட்டிருந்ததாவது:
“வெற்றிகரமாக நிறைவேறியது என்று சொல்கிறோமே, அது என்னவென்று கேட்டால், இன்றைக்கு நடந்த வைபவம்தான்! என்று ராஜாஜி எட்டையபுரம் அஸ்திவார விழா நடந்து முடிந்ததும் கூறினார்.
ராஜாஜி எந்த விஷயத்தைப் பற்றியும் அவ்வளவு உற்சாகமாகப் பாராட்டியோ, அளவுக்கு மீறிப் புகழ்ந்தோ சொல்லக் கூடியவர் அல்ல என்பது யாவரும் அறிந்ததே. அத்தகையவர் மேற்கண்டவாறு சொல்ல வேண்டுமென்றால், எட்டையபுரம் திருவிழா எவ்வளவு நன்றாக நடந்திருக்க வேண்டும் என்று சொல்ல வேண்டியதில்லை. இதுவரை தமிழ்நாட்டில் இலக்கிய சம்பந்தமான இத்தகைய மகத்தான உற்சவம் ஒன்று நடந்தது கிடையாது என்று சொன்னால் சிறிதும் மிகையாகாது.
என்னுடைய சொந்த அனுபவத்தில், மனிதனுடைய புலன்களுக்கும், அறிவுக்கும் எட்டாத சக்தி இருப்பதாக நான் உணர்ந்திருக்கிறேன். அத்தகைய சக்தியானது வெறும் குருட்டுத்தனமான சக்தி அல்ல; ஏதோ ஒரு நியதியின்படி இந்த உலகத்தையும், இதில் நடைபெறும் சகல காரியங்களையும் நடத்திவருகிறது என்று நம்புகிறேன்.
அந்தச் சக்தியானது தற்சமயம் தமிழ்நாட்டை ஒரு மகோன்னதமான நிலைமைக்குக் கொண்டுபோகும் மார்க்கத்தில் நடத்திக் கொண்டு வருகிறது என்று நான் பரிபூரணமாய் நம்புகிறேன். பாரதியார் பாடிப் பரவியுள்ள பராசக்தி அதுதான் போலும்! அந்த மகாசக்தியின் காரணமாகத்தான், எட்டையபுரத்தில் நான் கண்ட அற்புதம் நிகழ்ந்தது என்று எனக்குத் தோன்றுகிறது” என்று பெருமிதத்துடன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மண்டபப் பணிகள் நடக்கும் பொழுது சேர்த்த பணம் தீர்ந்துவிட்ட நிலை ஆகிவிட்டது. மீண்டும் ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்திக்கு இந்தப் பணி குறித்த கவலையும் தயக்கமும் ஏற்பட்டது. இதை அறிந்த விட்டலாபுரம் வெங்கடாச்சாரி நன்கொடையாக ரூ.100 அனுப்பினார். இந்த விவரத்தைக் ‘கல்கி’ இதழில் வெளியிடவும், டி.கே.சி., சின்ன அண்ணாமலை, வெங்கடாச்சாரி ஆகியோர் சேர்ந்து வசூலித்த தொகை ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் சேர்ந்தது.
ஏ.வி.மெய்யப்பச் செட்டியார், டி.கே.எஸ். சகோதரர்கள், வர்த்தகப் பிரமுகர் வி.எல்.நரசு, நவாப் ராஜ மாணிக்கம், ராணிப்பேட்டை கே.ஆர்.கல்யாணராமய்யர், முகம்மது சுலைமான், கோவில்பட்டி லட்சுமி ஆலை அதிபர்கள் ஜி.கே.தேவராஜுலு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஜி.கே.சுந்தரம், அது மட்டுமல்லாமல் சென்னை சிவில் சப்ளை இலாகா நாடகக் குழுவினர் பலர் உதவி செய்தனர்.
பாரதி மண்டபத் திறப்பு விழா ஏற்பாடுகள்
பாரதி மண்டபத் திறப்புவிழா நிகழ்ச்சிகளுக்குக் ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி எட்டையபுரத்தில் முகாமிட்டுத் தங்கினார். ‘தமிழ் உயர்ந்தது’ என்ற தலைப்பில் பாரதி மண்டபத் தொடக்கத்தைப் பற்றி ‘கல்கி’ குறிப்பிட்டதாவது:
“எட்டையபுரத்துக் கரிசல் பூமியில் மழை பெய்தால், ஒரு நொடியில் கரிசல் மண் சேறாகி யானையைக் கூட உள்ளே இழுத்துக் கொண்டுவிடும் என்று எச்சரிக்கை செய்திருந்தார்கள். சென்ற பத்து வருஷத்துக்குக் கணக்கு பார்த்ததில் அங்கே அக்டோபர் மாதத்திலேதான் சராசரி மழை அதிகம் என்று கண்டுபிடித்துச் சொன்னார்கள். எனினும், செப்டம்பர் மாதத்தில் தேதி குறிப்பிட்டிருந்த திருவிழாவைக் கட்டாயமாக அக்டோபர் மாதத்துக்குத் தள்ளிப்போட வேண்டி நேர்ந்தது. அதற்கு மேலே தள்ளிப்போடவும் முடியவில்லை.
பஸ்கள் ஓடுவது சரிதான். ஆனால், பஸ்கள் ஓடக் கூடிய சாலை வேண்டாமா? திருவிழாவுக்கு ஒரு மாதத்துக்கு முன்னால் கோவில்பட்டி – எட்டையபுரம் சாலையில் குழிகள், குட்டைகள், குளங்கள், மலைகள் எல்லாம் குடிகொண்டிருந்தன. அப்பேர்ப்பட்ட சாலையைப் போக்குவரத்துக்குத் தகுதியாகச் செய்து கொடுத்தார் நமது மராமத்து இலாகா மந்திரி பக்தவத்சலம். அவரது உதவியை நினைக்கும்போதெல்லாம் பின்வரும் பாடல் என் உள்ளத்தில் பொங்கி வருகிறது.
வாழ்க நீ எம்மான்! இந்த வையத்து ரோட்டிலெல்லாம்
தாழ்வுற்றுக் குழி விழுந்து தடுமாறி விழுதற் கேற்பப்
பாழ்பட்டுக் கிடந்த ரோட்டைப் பள்ளமும் மேடும் இன்றி
வாழ்விக்க வந்த பக்த வத்ஸல மந்திரியே! வாழி!
திறப்பு விழாவை இந்த வருஷம் நடத்துவது என்று தீர்மானித்த உடனேயே திருநெல்வேலி ஜில்லாக் காங்கிரஸ் கமிட்டியின் ஒத்துழைப்பைக் கோரினேன். கமிட்டியின் தலைவர் ஸ்ரீ ஏ.பி.சி. வீரபாகு மனமுவந்து ஒத்துழைப்பதாக வாக்களித்ததுடன், ஸ்ரீசோமையாஜுலுவை இந்தத் திருப்பணிக்காகக் கொடுத்து உதவினார். இதைக் காட்டிலும் சிறந்த உதவி ஜில்லா கமிட்டியார் செய்திருக்க முடியாது.
வெளியூரிலிருந்து வருகிறவர்களுக்கு உணவு அளிக்கலாம் என்று சர்க்கார் அனுமதி தந்தார்கள். ஆனால், “உணவுப் பொருள்களை நீங்களே சேகரித்துக் கொள்ள வேண்டும். கவர்மெண்டு டெப்போக்களிலிருந்து ஒரு மணி அரிசி கூட தர முடியாது!” என்று சொல்லிவிட்டார்கள்.
“அதற்கென்ன? அரிசி நான் சேகரிக்கிறேன்” என்றார் ஸ்ரீ சோமையாஜுலு.
எட்டையபுரத்துக்குச் சுற்றுவட்டாரத்தில் நெல் வயலையே காண முடியாது. வெகு தூரங்களிலிருந்து அரிசி சேகரித்துக் கொண்டுவர வேண்டியிருந்தது. சர்க்கார் அதிகாரிகள் ‘புரொக்யூர்மென்ட்’ திட்டப்படி சுரண்டிக் கொண்டு போனது போக, மிச்சம் குடித்தனக்காரர்கள் சாப்பாட்டுக்காக வைத்துக் கொண்டதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகச் சேகரித்துக் கொண்டு வந்து சேர்த்தார்.
இது மட்டுமா? பருப்பும், மிளகாயும், வெல்லமும், சர்க்கரையும், வெங்காயமும், காய்கறிகளும் கொண்டு வந்து குவித்தார். கார் கிடைத்தபோது காரிலும், கார் இல்லாதபோது பஸ்ஸிலும், பஸ் இல்லாதபோது கால்நடையாகவும் திருநெல்வேலி ஜில்லா முழுவதும் சுற்றி அலைந்தார்.
பந்தலில் தொடக்கவிழா முதல் நாள் நள்ளிரவில் சோமையாஜுலு, கந்தசாமி செட்டியார், சா.கணேசன், கே.பி.எஸ்.நாராயணன் ஆகியோருடன் சதாசிவமும் நானும்தான் பாக்கி இருந்தோம். ஒரே குப்பையும் கூளமுமாகப் பந்தலில் இருந்ததைப் பார்த்து, ‘காலையில் திறப்பு விழா; இப்படி இருக்கின்றதே’ என்று சொன்னவுடன் சோமையாஜுலு ‘நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் ஜாகைக்குச் செல்லுங்கள்’ என்றார்.
நான் ‘போக முடியாது. இதெல்லாம் முடித்து விட்டுத்தான் செல்வேன்’ என்றேன். ஆனால் அங்கிருந்தவர்கள் அனைவரும் என்னை அனுப்பி விட்டனர். எல்லாப் பணிகளையும் சோமையாஜுலு திறம்பட முடித்து அதிகாலை ஐந்து மணிக்கு என்னுடன் ஜாகைக்கு வந்தார். நானும் விழாப் பந்தலைப் பார்த்தவுடன் பரவசப்பட்டுப் போனேன். அம்மாதிரி பணிகளைச் சுறுசுறுப்பாக முடித்து பந்தல் விழாவுக்குத் தயாராக இருந்தது” என்று ‘கல்கி’ விவரித்திருந்தது.
விழா குறித்து ‘கல்கி’ இதழ் மேலும் கூறுகிறது: “1947 அக்டோபர் 11-ம் தேதி அன்று எட்டையபுரம் பாரதி வீட்டின் வெளி மாடியில் அவருடைய நினைவாலய விழா பூர்வாங்கமாகத் தொடங்கியது. மணிக்கொடி பறக்க விடப்பட்டது. மற்றொரு கொடி பாரதி மண்டபத்தில் அமைந்திருந்த பந்தலில் ஏற்றப்பட்டது. காரைக்குடி கம்பன் கழகச் செயலாளர் சா.கணேசன் மண்டபத்தின் பந்தலில் கொடியை ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து இரண்டு நாட்களும் நினைவு மண்டபத் திறப்பு விழா வாழையும், கமுகும், கூந்தல் பனைகளும், தளைவடங்களும், மலர்ச் சரங்களும் கணேசன் பொறுப்பேற்று அமைத்தார். இச் செய்தியை, ‘தினமணி’ இரண்டு பக்கமும், ‘இந்து’ நான்கு பத்திகளிலும் பெரிதாக வெளியிட்டன.
இந்த மண்டபத்தை ராஜாஜி முறைப்படி அடிக்கல் நாட்டி வைத்தது மட்டுமல்லாமல் திறந்தும் வைத்தார். பாரதியார் உருவம் பொருந்திய ‘பாரதி ஸ்பெஷல்’ ரயில் சென்னையிலிருந்து 10-ம் தேதி மாலை புறப்பட்டு மறுநாள் பிற்பகல் கோவில்பட்டி ரயிலடி வந்தது. அதில் மேற்கு வங்க கவர்னர் ராஜாஜி, சென்னை மாநிலப் பிரதமர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், அமைச்சர்கள், வெவ்வேறு கட்சிகளின் தலைவர்கள், எழுத்தாளர்கள், திரைப்படக் கலைஞர்கள், பத்திரிகை நிருபர்கள் வந்திறங்கியதும் கோவில்பட்டி நகரமும், எட்டையபுரமும் விழாக் கோலம் பூண்டது.
‘கல்கி’ சதாசிவம், எட்டையபுரம் மகாராஜா, நினைவு மண்டபக் குழுவின் பொதுச் செயலாளர் சோமையாஜுலு போன்றவர்கள் ரயிலில் வந்தவர்களை ரயிலடியில் வரவேற்றனர். ராஜாஜியும், ஓமந்தூராரும் எட்டையபுரம் மகாராஜா வீட்டில் தங்கினார்கள். மற்றவர்கள் வசதியான இல்லங்களிலும், பள்ளிகளிலும், பொதுக் கட்டிடங்களிலும் தங்கினார்கள். பாரதி நினைவு மண்டப நிகழ்ச்சியில் 50 ஆயிரத்திலிருந்து 1 லட்சம் பேர் வரை திரண்டனர் என பத்திரிகைகள் எழுதின. ஊர் முழுவதும் வளைவுகள், தோரணங்கள், பதாகைகள் என்று எட்டையபுரம் முழுவதும் அலங்கரித்தன.
13-ம் தேதி காலையில் மூன்று யானைகள் முன் நடக்க, மேளதாளங்கள் முழங்க ராஜாஜியும், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரும் மண்டபம் வரை நடந்து வந்தனர். பாரதியின் ‘பொழுது புலர்ந்தது’, ‘தெய்வத் தமிழ்நாட்டினிலே’ என்ற கீதங்களை எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடி முடித்ததும் நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின. சோமையாஜுலு வரவேற்புரை நிகழ்த்தினார்.
ராஜாஜி சுருக்கமாகத் தலைமை உரையாற்றினார். சென்னை சட்டப் பேரவைத் தலைவர் சிவசண்முகம் பிள்ளை, உணவு அமைச்சர் டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன், கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவானந்தம், மதுவிலக்குத் துறை அமைச்சர் டானியல் தாமஸ், மெளலானா சாகிப், நாமக்கல் கவிஞர், ம.பொ.சிவஞானம், எல்.கிருஷ்ணசாமி பாரதி ஆகியோர் பேசி முடித்ததும் முதல்வர் ஓமந்தூர் ரெட்டியார் பாரதி சிலையைத் திறந்து வைத்து உரையாற்றினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் தியாக சீலர் காமராஜர், தனக்கும் ராஜாஜிக்கும் இடையே இருந்த பிணக்கை மறந்து இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார். காமராஜர் பேசி முடித்தவுடன் மேடையை விட்டு இறங்கிப் பார்வையாளர்கள் வரிசையில் உட்கார்ந்தார். அவரை, ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி கையோடு திரும்பவும் மேடைக்கு அழைத்து வந்து ராஜாஜியின் அருகில் அமரச் செய்தார். நடிகர் டி.கே.சண்முகம், சகுந்தா பாரதியும் பாரதி பாடல்களை மேடையில் பாடினர். திரும்பவும் எம்.எஸ்.சுப்புலட்சுமி பாட, ‘கல்கி’ ஆனந்தி, ராதா ஆகியோரின் நடனமும் நடைபெற்றது.
இறுதியாக, ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி அரை மணி நேரம் நன்றியுரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சிக்கு மிகவும் அரும்பாடு பட்ட சோமையாஜுலுவை ‘கல்கி’ பெரிதும் பாராட்டினார்.
பாரதி மண்டபத் திருவிழாவுக்கு இரண்டு நாள் முன்னதாகவே வந்திருந்து பல விதங்களிலும் ஒத்துழைத்த எம்.பி.பெரியசாமியைக் ‘கல்கி’ வாழ்த்தினார். மற்றும் ராய்ட்டர் நிருபருக்கும், சென்னை தினப்பத்திரிகை நிருபர்களுக்கும், பாரதி மண்டப விழாவைத் தங்கள் சொந்த விழாவாகக் கருதி ஒத்துழைத்த ஆசிரியர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் கல்கி நன்றி கூறினார். அவர்களுக்கு நேர்ந்திருக்கக் கூடிய அசெளகரியங்களை உணர்ந்து மன்னிப்பு வேண்டினார்.
தமிழ்நாட்டின் நாலாபக்கங்களிலிருந்தும், இலங்கையிலிருந்தும், கல்கத்தாவிலிருந்தும், பம்பாயிலிருந்தும் விஜயம் செய்து பாரதி மண்டபத் திறப்பு விழாவைச் சிறப்பித்த தமிழறிஞர்கள், தமிழன்பர்கள், மகாஜனங்கள் எல்லோருக்கும் கல்கி மனமார்ந்த நன்றி கூறினார்.” இவ்வாறு பாரதி நினைவு மண்டபத் திறப்பு விழா எட்டையபுரத்தில் சீரும் சிறப்புமாக நடைபெற்றது.
இப்படியாக விலாவாரியாக விவரித்திருந்தது ‘கல்கி’. பாரதிக்கு நினைவு மண்டபம் கண்ட கல்கியின் நூற்றாண்டு விழாவை 1999-ம் ஆண்டில் கொண்டாடியபோது, ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தியின் உருவச் சிலையை எட்டையபுரம் பாரதி மண்டபத்தில் நிறுவ வேண்டும் என்று ஆட்சியாளரை அவரது புதல்வர் கி.ராஜேந்திரன் அணுகியபோது, உரிய அனுமதி கிடைக்காததால் மிக வேதனையுடன் அச்சிலையைச் சென்னை ‘கல்கி’ அலுவலகத்தில் அமைத்தார்.
அதேசமயத்தில் வைகோ சிவகாசி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலகட்டத்தில், சிவகாசி தொகுதிக்கு உட்பட்ட எட்டையபுரத்தில் தன்னுடைய தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து கட்டப்பட்ட சமுதாய மண்டபத்துக்குக் ‘கல்கி’ பெயர் வைக்க விரும்பி, இதுகுறித்து நான், வைகோ சார்பில் தமிழக அரசிடம் முறையிட்டும் உரிய அனுமதியும், சரியான பதிலும் கிடைக்காதது மிகவும் வேதனை தந்தது. பாரதிக்கு மட்டுமல்லாமல் காந்திக்கும், சென்னையில் நினைவு மண்டபம் கட்ட பெரும் முயற்சி மேற்கொண்டவர் ‘கல்கி’ ஆவார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்த மூத்த தலைவர் சோ.அழகர்சாமி, வருடா வருடம் பாரதி விழா நடத்துவார். இவர் முதலில் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் சோசலிஸ்ட் கட்சியில் இருந்தார். பின் பொதுவுடைமைவாதி ஜீவாவின் பேச்சாற்றலால் கவரப்பட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் 1950-களில் இணைந்தார். பாரதி மேல் தீராத பற்று கொண்டவர். எட்டையபுரம் உள்ளடக்கிய கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் தொடர்ந்து பலமுறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவருடன் எனக்கு நீண்டகாலம் நெருக்கமும், பழக்கமும் உண்டு. இந்நிலையில், அவரை எதிர்த்தே 1989-ல் திமுக வேட்பாளராகப் போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டது. தேர்தல் சமயத்தில் எட்டையபுரம் அருகே உள்ள கீழஈராலில் இருவரும் சந்தித்தபோது, அவர் சொன்னார், “தேர்தலில் நீ ஜெயித்தால் என்ன… நான் ஜெயித்தால் என்ன… உன்னைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும்” என்றார். அந்தப் பெருந்தன்மை இன்றைக்கு எந்த அரசியல்வாதிக்கு வரும்? சோ.அழகர்சாமியைப் பற்றி விரிவாக பின்னால் வருகின்ற குறிப்புகளில் சொல்ல இருக்கின்றேன்.
இனி… நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடத்திய மகாகவி பாரதி திருநாள் குறித்து பார்ப்போம்…