ஒட்டாவோ: கனடாவில் தலைநகருக்கு அருகே இந்தியர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடாவின் ஒட்டாவா நகருக்கு அருகில் இந்தியர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டதாகவும், சந்தேக நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளதாகவும் அந்நாட்டிற்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஒட்டாவா அருகே உள்ள ராக்லேண்டில் இந்தியர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தது எங்களுக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் அமைப்பின் மூலம், துயரத்தில் இருக்கும் உறவினர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க நாங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளோம்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், உயிரிழந்தவர் யார் என்பது குறித்த தகவலை தூதரகம் வெளியிடவில்லை.
இந்த சம்பவம் குறித்து ஒன்ராறியோ மாகாண காவல்துறை, வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு முன்பு ராக்லேண்டில் உள்ள லாலோண்டே தெரு அருகே துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. ஒட்டாவாவின் மையப்பகுதியிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் கிழக்கே இந்த இடம் அமைந்துள்ளது. பொது பாதுகாப்பு தொடர்பாக எந்த கவலையும் இல்லை. விசாரணையின் ஆரம்ப கட்டத்தில் நாங்கள் இருப்பதால், மேலும் எந்த தகவலையும் வழங்க முடியாது” என்று தெரிவித்ததாக CTV செய்திகள் தெரிவிக்கின்றன.
காவலில் உள்ள நபர் மீது என்ன குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன என்பதை போலீசார் இன்னும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.