தன்னுடைய முந்தைய அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக சிராஜ் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய போது நல்ல வேகத்துடன் தீப்பொறி பறக்க வீசினார். குஜராத் டைட்டன்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
7 ஆண்டுகள் ஆர்சிபி அணிக்காக ஆடி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியமே கதி என்று இருந்த சிராஜ், அந்தப் போட்டியில் ஆர்சிபிக்கு எதிராக உணர்ச்சிவயப்பட்டுக் காணப்பட்டார். ஆர்சிபி அணி எப்போதும் என் இதயத்துக்கு நெருக்கமானது என்று சிராஜ் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சிராஜ் பற்றி விரேந்திர சேவாக் கூறுகையில், “அந்த ஆட்டத்தில் முதலில் 3 ஓவர்கள் வீசினார், தொடர்ச்சியாக 4 ஓவர்களை வீசியிருந்தால் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருப்பார். அவரிடம் இன்னும் அந்த தீப்பொறி உள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி அணியில் அவரைத் தேர்வு செய்யாமல் விட்டதால் அவர் நிச்சயம் மனம் புண்பட்டிருப்பார். அதனால்தான் தீப்பொறி பறக்க வீசி பெவிலியனை நோக்கி செய்கையெல்லாம் செய்து காட்டினார்.
ஒரு வேகப்பந்து வீச்சாளரிடமிருந்து இத்தகைய வேகத்தையும் ஆக்ரோஷத்தையும்தான் நாம் எதிர்பார்க்கிறோம்” என்றார் சேவாக்.
ஆஸ்திரேலிய தொடருக்குப் பிறகே சிராஜை சாம்பியன்ஸ் டிராபியிலிருந்து கழற்றி விட்டார்கள். பழைய பந்தில் சிராஜ் அவ்வளவு நன்றாக வீசுவதில்லை என்று ரோஹித் சர்மா அதற்கான காரணமாகக் கூறினார். இது ஒரு காரணமே அல்ல. ரோஹித் சர்மா புள்ளி விவரங்கள் தெரியாமல் உளறினார் என்பதை சிராஜ் பிற்பாடு புள்ளி விவரங்களுடன் நிரூபித்தார்.
“நான் பழைய பந்தில் அதிக விக்கெட்டுகளை எடுத்திருக்கிறேன், கடந்த ஆண்டில் உலகின் 10 வேகப்பந்து வீச்சாளர்களில் பழைய பந்தில் அதிக விக்கெட்டுகளை எடுத்திருக்கிறேன். என்னுடைய சிக்கன விகிதமும் குறைவே. எண்கள் பேசும். நான் புதிய, பழைய பந்துகள் இரண்டிலும் சிறப்பாகவே செயல்பட்டுள்ளேன்” என்று ரோஹித் சர்மாவுக்கு சூசகமாகப் பதிலடி கொடுத்தார் சிராஜ்.
இந்நிலையில்தான் சாம்பியன்ஸ் டிராபியில் அவரை தேர்வு செய்யாததால் சிராஜ் மனம் புண்பட்டது என்றும் அதனால் அவர் பந்து வீச்சில் தீப்பொறி தெறிக்கிறது என்றும் சேவாக் கூறி தன் ஆதரவைப் பதிவு செய்துள்ளார்.