முலான்பூர்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு முலான்பூரில் நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஸ்ரேயஸ் ஐயர் தலைமயிலான பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் ஆட்டத்தில் 11 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியையும், 2-வது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தியிருந்தது. சிறந்த பார்மில் உள்ள அந்த அணி ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்புடன் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது முதல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில், 2-வது ஆட்டத்தில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் வீழ்ந்தது. எனினும் அடுத்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நம்பிக்கையை பெற்றது.
இன்றைய ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அணியை முழுமையாக வழிநடத்தக்கூடும். இதனால் அந்த அணி கூடுதல் பலம் பெறக்கூடும். தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் பார்ம் கவலை அளிக்கும் விதத்தில் உள்ளது. அவர், நடப்பு சீசனில் 3 ஆட்டங்களிலும் முறையே 1, 29 மற்றும் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இன்றைய ஆட்டத்தில் அவர், பார்முக்கு திரும்புவதில் கவனம் செலுத்தக்கூடும்.
பஞ்சாப் அணியின் பேட்டிங்கில் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் சிறந்த பார்மில் உள்ளார். இரு ஆட்டங்களிலும் அரை சதங்கள் விளாசிய உள்ள அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த மட்டை வீச்சு வெளிப்படக்கூடும். மேலும் அவரது தாக்குதல் ஆட்டம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சு துறைக்கு சவால் அளிக்கக்கூடும். ஏனெனில் இந்த சீசனில் இரு ஆட்டங்களில் ஸ்ரேயஸ் ஐயர் 13 சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ளார். கடந்த சீசனில் 16 ஆட்டங்களில் விளையாடி 13 சிக்ஸர்களை அடித்த ஸ்ரேயஸ் ஐயர் இம்முறை அதை 2 ஆட்டங்களில் விளாசி மிரட்டியுள்ளார்.
மேலும் கேப்டன் பதவியிலும் ஸ்ரேயஸ் ஐயர் அற்புதமாக செயல்பட்டு வருகிறார். லக்னோ அணிக்கு எதிராக நிக்கோலஸ் பூரன், ரிஷப் பந்த் ஆகியோருக்கு அருமையாக பீல்டிங் அமைத்து விரைவிலேயே வெளியேற்றியிருந்தார். மேலும் பந்து வீச்சாளர்களை பயன்படுத்தும் விதமும் அனைவரையும் கவர்ந்துள்ளது. இதனால் கேப்டனாகவும், அதிரடி பேட்ஸ்மேனாகவும் உருவெடுத்துள்ள ஸ்ரேயஸ் ஐயர் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.