ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக் கோப்பை போட்டி முடிந்தபின், இந்திய அணிக்கு முழு நேரப் பயிற்சியாளராகப் பதவி ஏற்க தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குநர் ராகுல் திராவிட் சம்மதித்துள்ளார்.
முதலில் புதிய பயிற்சியாளர் நியமிக்கும் வரை அல்லது தென் ஆப்பிரிக்கத் தொடர் வரை பயிற்சியாளராக மட்டும் இருக்கவே திராவிட் சம்மதித்தார். ஆனால், பிசிசிஐ தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா கேட்டுக்கொண்டதை அடுத்து, முழு நேரப் பயிற்சியாளராக திராவிட் மாறுகிறார்.
இதன் மூலம் ராகுல் திராவிட் 2023-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி வரை இந்திய அணிக்குப் பயிற்சியாளராக நீடிப்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராகுல் திராவிட் 19 வயதுக்குட்பட்ட மற்றும் இந்திய ஏ அணிக்குப் பயிற்சியாளராக இருந்தபோதுதான் ரிஷப் பந்த், ஷுப்மான் கில், ஆவேஷ் கான், பிரித்வி ஷா, ஹனுமா விஹாரி போன்ற இளம் வீரர்கள் வளர்த்தெடுக்கப்பட்டனர்.
ராகுல் திராவிட் அமைத்துக் கொடுத்த வலுவான அடித்தளத்தால்தான் இந்திய அணிக்கு பேட்டிங், பந்துவீச்சு, ஆல்ரவுண்டர்கள் பிரிவில் ஏராளமான வீரர்கள் இருக்கிறார்கள்.
பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், “2023-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி வரை இந்திய அணிக்குப் பயிற்சியாளராக நீடிக்க ராகுல் திராவிட் சம்மதித்துள்ளார். தொடக்கத்தில் மறுத்த திராவிட், அதன்பின் பிசிசிஐ தலைவர் கங்குலி, ஜெய்ஷா ஆகியோருடன் ஐபிஎல் இறுதிப் போட்டியின்போது நடந்த சந்திப்புக்குப் பின் சம்மதித்துள்ளார். இடைக்காலப் பயிற்சியாளர் பதவிக்கு திராவிட் வரவில்லை” எனத் தெரிவித்தார்.
திராவிட்டுக்கு உதவியாக அவரின் நம்பிக்கையைப் பெற்ற பராஸ் மாம்பரே பந்துவீச்சுப் பயிற்சியாளராக நியமிக்கப்படலாம். பேட்டிங் பயிற்சியாளராகத் தற்போது இருக்கும் விக்ரம் ரத்தோர் தொடரக்கூடும் எனத் தெரிகிறது. இதுவரை புதிய பயிற்சியாளருக்கான எந்த விளம்பரத்தையும் பிசிசிஐ வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரவி சாஸ்திரி ஆண்டுக்கு ரூ.8.5 கோடி ஊதியத்தில் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். ஆனால், திராவிட்டுக்கு அதைவிடக் கூடுதலாக ஊதியம் வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.
ரோஹித் சர்மாவுக்கு அடுத்த ஆண்டு 35 வயதாகிவிடும். விராட் கோலிக்கு 34 ஆகிவிடும். அதன்பின் ஷமி, இசாந்த் சர்மா, புஜாரா, ரஹானே ஆகியோர் அடுத்த 2 ஆண்டுகள் வரை அதிகபட்சமாக விளையாடலாம். அதன்பின் அணிக்குள் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கு வீரர்களைக் கொண்டுவந்து வலிமையானதாக மாற்ற சிறந்த பயிற்சியாளர் தேவை என்பதால் திராவிட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.