கிருஷ்ணகிரி: “தன்னை உருவாக்கிய சசிகலாவின் அரசியல் வாழ்க்கையை பழனிசாமி முடித்துவிட்டார்” என திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பேருந்து நிலையத்தில், கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து பொதுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசியது: “பாஜகவுக்கு திமுக எதிரி கிடையாது. ஏனென்றால், பாஜக தமிழகத்தில் உயிரோடு இல்லை; இருப்பதை போல் காட்டிக் கொள்கின்றனர்.
தமிழகத்தில் தலைவர்கள் பலர் தனக்கு எழுதும் கடிதத்தில் தமிழில் கையெழுத்திடுவது இல்லை என பிரதமர் மோடி கூறுகிறார். முதலில் அவர் தனது தாய் மொழியில் பேசட்டும். தாமரை தண்ணீரில் தான் மலரக் கூடிய குணம் கொண்டது. தாமரை முளைக்கும், தாமரை மலரும் என கூறுகிறார்கள், ஆனால் தமிழகத்தில் தாமரை மலராது. ஏனென்றால் ஏற்கெனவே இங்கு தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. ஆனால், தாமரை இலை மேல் தண்ணீர் ஊற்றினால் அந்த இலை தண்ணீரை நிராகரித்து விடும்.