வாஷிங்டன்: அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டுப் பொருட்களுக்கு வரி விகிதங்களை உயர்த்தி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பால் வெள்ளிக்கிழமை அமெரிக்க பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்தது. இது குறித்த கேள்விக்குப் பதிலளித்த ட்ரம்ப், “எதையாவது சரி செய்ய வேண்டுமென்றால் சில நேரங்களில் மருந்து அவசியம் தானே” என்று தனது வரிவிதிப்பு நடவடிக்கையை நியாயப் படுத்திப் பேசியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை ஃப்ளோரிடாவில் கோல்ஃப் விளையாடிவிட்டு வாஷிங்டன்னுக்கு திரும்பிய ட்ரம்ப் விமானத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி கொடுத்தார்.
அப்போது அவர் கூறியதாவது: உலக நாடுகளால் நாங்கள் மிக மோசமாக நடத்தப்பட்டோம். முன்பிருந்து முட்டாள்தனமான தலைமை அதை அனுமதித்தது. ஆனால் நாங்கள் அதை சரி செய்கிறோம். சிலவற்றை சரி செய்ய சில நேரங்களில் மருந்து அவசியமாகிறது. அப்படித்தான் இந்த வரி விதிப்பும். இது ஓர் அழகான நடவடிக்கை.
பங்குச்சந்தைகளில் என்ன நடக்கும் என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால் எல்லா சவால்களையும் சமாளிக்கும் அளவுக்கு அமெரிக்கா மிகவும் வலுவான தேசம். நாங்கள் பரஸ்பர வரியை விதித்துள்ள நிலையில் உலக நாடுகள் பலவும் எங்களோடு ஏதேனும் ஒப்பந்தம் செய்து சுமையைக் குறைத்துக் கொள்ள முடியாதா என்று போராடி வருகின்றன. ஆனால் இந்த வரி விதிப்பை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை. இவ்வாறு ட்ரம்ப் கூறியுள்ளார்.
ட்ரம்ப் வரி விதிப்பால் பண வீக்கம் அதிகரிக்கும், பொருளாதார மந்தநிலை ஏற்படக்கூடும் என்று அமெரிக்க முதலீட்டாளர்கள் அச்சம் தெரிவித்துள்ள நிலையில் ட்ரம்ப்பின் பொருளாதார ஆலோசனைக்குழு அதிகாரிகள் அத்தகைய அச்சம் தேவையில்லை என்று கூறியுள்ளனர். ஆனால் வெள்ளிக்கிழமையே அமெரிக்க பங்குச்சந்தைகளில் 6 ட்ரில்லியன் டாலர் வரை சரிவு ஏற்பட்டது கவனிக்கத்தக்கது.