கொல்கத்தா: உச்ச நீதிமன்ற உத்தரவால் நியமனம் ரத்து செய்யப்பட்ட ஆசிரியர்களின் வேலை பாதுகாக்கப்படும் என்றும் தான் உயிருடன் இருக்கும் வரை யாரும் வேலையை இழக்க மாட்டார்கள் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உறுதி அளித்துள்ளார்.
மேற்குவங்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு பணியமர்த்தப்பட்ட 25,753 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் நியமனம் செல்லாது என கொல்கத்தா உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் கடந்த 3ம் தேதி உறுதி செய்தது.
இந்நிலையில், வேலை இழந்த ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களைச் சந்தித்து மம்தா பானர்ஜி பேசினார். அப்போது அவர், “உச்ச நீதிமன்ற உத்தரவால் நியமனம் ரத்து செய்யப்பட்ட ஆசிரியர்களின் வேலை பாதுகாக்கப்படும். நான் உயிருடன் இருக்கும் வரை யாரும் வேலையை இழக்க மாட்டார்கள்.
யார் தகுதியானவர், யார் தகுதியற்றவர் என்பதை உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்த வேண்டும். கல்வி முறையை சீர்குலைக்க யாருக்கும் உரிமை இல்லை. பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில் வியாபம் வழக்கில், பலர் கொல்லப்பட்டனர். அவர்களுக்கு இன்று வரை நீதி கிடைக்கவில்லை. நீட் தேர்வில், பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. உச்ச நீதிமன்றம் தேர்வை ரத்து செய்யவில்லை.
உச்ச நீதிமன்றம் எங்களுக்கு தெளிவுபடுத்தினால், நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம். இல்லையென்றால், நாங்கள் ஒரு வழியைக் கண்டுபிடித்து உங்களுக்கு (நியமனம் ரத்து செய்யப்பட்ட ஊழியர்கள்) ஆதரவாக நிற்போம். இரண்டு மாதங்கள் கஷ்டப்படுங்கள். 20 ஆண்டுகள் நீங்கள் கஷ்டப்பட வேண்டியதில்லை. அந்த இரண்டு மாதங்களுக்கும் நான் இழப்பீடு வழங்குவேன். நீங்கள் பிச்சை எடுக்க வேண்டியதில்லை.
கல்வி முறையை அழிக்க ஒரு சதி நடக்கிறது. உயர்கல்விக்கான நுழைவாயில்களாக இருப்பவர்கள் 9, 10, 11, 12 ஆம் வகுப்புகளின் ஆசிரியர்கள். நியமனம் ரத்து செய்யப்பட்ட ஆசிரியர்களில் பலர் தங்கப் பதக்கம் வென்றவர்கள், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் சிறந்த முடிவுகளை அடைந்துள்ளனர், நீங்கள் அவர்களை திருடர்கள் என்று அழைக்கிறீர்கள். நீங்கள் அவர்களை திறமையற்றவர்கள் என்று அழைக்கிறீர்கள், உங்களுக்கு இந்த உரிமையை யார் கொடுத்தார்கள்? இந்த விளையாட்டை விளையாடுவது யார்?
தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொண்டதாக தயவுசெய்து கருத வேண்டாம். நாங்கள் கல் நெஞ்சம் கொண்டவர்கள் அல்ல. இதைச் சொன்னதற்காக நான் சிறையில் அடைக்கப்படலாம். ஆனால் எனக்கு அது குறித்து கவலையில்லை. வேலை இழந்தவர்களுக்கு நான் துணை நிற்கிறேன், அவர்களின் கண்ணியத்தை மீட்டெடுக்க எல்லாவற்றையும் செய்வேன்.
தகுதியானவர்கள் வேலைகளை இழக்க நான் அனுமதிக்க மாட்டேன். அதோடு, உங்கள் சேவை இடைவெளி இன்றி தொடர்வதை உறுதி செய்ய எங்களிடம் தனித்தனி திட்டங்கள் உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
பின்னணி: மேற்குவங்கத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு கடந்த 2016-ம் ஆண்டு 25,753 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த ஊழலில் மேற்குவங்க முன்னாள் கல்வித்துறை அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி, திரிணமூல் எம்எல்ஏ.க்கள் மானிக் பட்டாச்சார்யா, ஜிபன் கிருஷ்ண சாகா ஆகியோர் சிக்கினர்.
இந்த நியமனத்தை கொல்கத்தா உயர்நீதிமன்றம் கடந்தாண்டு ஏப்ரல் 22-ம் ரத்து செய்தது. ஆசிரியர்கள் இதுவரை பெற்ற சம்பளத்தை 12 சதவீத வட்டியுடன் திருப்பி அளிக்கவும் உத்தரவிட்டது. இந்த ஊழல் குறித்து விசாரிக்க சிபிஐ-க்கு உத்தரவிட்டது. உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து மேற்குவங்க அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவு, சிபிஐ விசாரணை ஆகியவற்றுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த மே மாதம் தடை விதித்தது. இதன் விசாரணை கடந்தாண்டு டிசம்பரில் தொடங்கியது.
இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி சஞ்சய் குமார் கடந்த 3ம் தேதி தீர்ப்பளித்தனர். அதில் கூறியதாவது: ஆசிரியர்கள் நியமனத்தை ரத்து செய்து, 3 மாதத்துக்குள் மீண்டும் தேர்வு செய்ய கொல்கத்தா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரியானதுதான். ஆசிரியர் தேர்வில் முறைகேடுகள், மோசடிகள் மிகப் பெரியளவில் நடைபெற்றுள்ளன. இந்த தேர்வு முறையில் நம்பகத்தன்மை நீர்த்துபோய் விட்டது. உயர்நீதிமன்ற உத்தரவில் சில மாற்றங்களை மட்டும் செய்கிறோம். நியமனம் ரத்து செய்யப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் இதுவரை பெற்ற சம்பளத்தை திருப்பிச் செலுத்த தேவையில்லை. மாற்றுத்திறனாளிகள் மட்டும் பணியில் தொடரலாம். மாநில அரசு 3 மாதத்துக்குள் ஆசிரியர்களை புதிதாக தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
மம்தா ராஜினாமா செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு குறித்து மேற்கு வங்க பாஜக தலைவரும், மத்திய கல்வித்துறை இணையமைச்சருமான சுகந்தா மஜூம்தார் எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள செய்தியில், “மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமினத்தில் ஊழலை தடுக்கத் தவறிய முதல்வர் மம்தா பானர்ஜி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். மம்தா அரசின் ஊழலால் தகுதியான ஆசிரியர்களும் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர். தகுதியானவர்கள் யார்? முறைகேடாக வேலையில் சேர்ந்தவர்கள் யார் என்பதை வேறுபடுத்தி பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஊழல் குறித்து மம்தா பானர்ஜி அரசு விளக்கம் அளிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.