Site icon Metro People

மத்திய அரசு பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க  தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

மத்திய அரசு பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “ தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனப் பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்; தமிழில் தேர்வு நடத்த வேண்டும் என்று பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார். இது மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.

தெற்கு தொடர்வண்டித்துறைக்கு அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியர்களில் 80 விழுக்காட்டினர் வட இந்தியர்கள் என்பதை நான் சுட்டிக்காட்டியிருந்தேன். அதைத் தொடர்ந்து இத்தகைய கடிதத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுதியிருப்பது மனநிறைவு அளிக்கிறது. தமிழகத்தில் மத்திய அரசு பணிகள் மற்றும் பொதுத்துறை பணிகளில் தமிழர்களுக்கு மாநில ஒதுக்கீடு பெற வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். இதை வலியுறுத்தி வரும் 9-ஆம் தேதி தொடங்கப்படவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தில் அரசினர் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் 80% தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இதை நடைமுறைப்படுத்துவதற்கான சட்டத்தையும் சட்டப்பேரவையில் நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version