Site icon Metro People

ஆவின் ஆரஞ்சு நிற பாக்கெட் பால் விலை உயர்வு ஏழை, நடுத்தர மக்களை பாதிக்கும்: அன்புமணி கண்டனம்

 “நீல உறை மற்றும் பச்சை உறை பால்களின் விலை உயர்த்தப்படாததும் வரவேற்கத்தக்கதே. ஆனால், ஆரஞ்சு நிற உறையில் சில்லறையில் விற்கப்படும் நிறைக்கொழுப்பு பாலின் விலை லிட்டருக்கு ரூ. 12 உயர்த்தப்பட்டிருப்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்படும் பாலின் விலை லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனாலும், 3 ஆண்டுகளுக்குப் பிறகு பால் விலை இப்போது தான் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் பால் உற்பத்தியாளர்கள் கோரிய விலை வழங்கப்படவில்லை.

எருமைப்பாலின் விலையை ரூ.51 ஆகவும், பசும்பாலின் விலையை ரூ.44 ஆகவும், அதாவது லிட்டருக்கு ரூ.10 உயர்த்த உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், அவர்கள் கோரியதை விட ரூ. 7 குறைவாகவே உயர்த்தப்பட்டுள்ளது. பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்த வேண்டும்.

நீல உறை மற்றும் பச்சை உறை பால்களின் விலை உயர்த்தப்படாததும் வரவேற்கத்தக்கதே. ஆனால், ஆரஞ்சு நிற உறையில் சில்லறையில் விற்கப்படும் நிறைக்கொழுப்பு பாலின் விலை லிட்டருக்கு ரூ. 12 உயர்த்தப்பட்டிருப்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும்.

மாதாந்திர அட்டை மூலம் வாங்கப்படும் பால் வீட்டுப் பயன்பாட்டுக்கானது; சில்லறை விற்பனையில் வாங்கப்படும் பால் வணிகப்பயன்பாட்டுக்கானது என்ற ஆவினின் யூகம் தவறு. பெரும்பாலான மக்கள் சில்லறை கடைகளில் தான் பால் வாங்குகின்றனர். எனவே ஆரஞ்சு பால் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, ஆவின் ஆரஞ்சு பால் (நிறைகொழுப்பு பால் pasteurized full cream milk) பாக்கெட்டின் சில்லறை விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.12 அதிகரித்து ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. அண்மையில் பால் கொள்முதல் விலையில் மாற்றம் செய்யப்பட்டதன் எதிரொலியாக இந்த விலையேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றம் நாளை (நவ.5) முதல் அமலுக்கு வருகிறது.

Exit mobile version