மகன் குணமடைய வேண்டி பவன் கல்​யாணின் மனைவி திருப்​ப​தி​யில் முடி காணிக்கை

திருமலை: ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் மனைவி அன்னா லெஸ்னவா திருமலையில் தலைமுடி காணிக்கை செலுத்தினார். மேலும் அன்னதானத்துக்கு ரூ.17 லட்சம் நன்கொடையும் அவர் வழங்கினார்.

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் இளைய மகன் மார்க் சங்கர். இவர் சிங்கப்பூரில் பள்ளி படிப்பு படித்து வருகிறார். இவர் படிக்கும் பள்ளியில் அண்மையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் மார்க் சங்கர் உட்பட பலர் தீக்காயமடைந்தனர். ஒரு மாணவி உயிரிழந்தார். இந்த தகவலை அறிந்ததும் பவன் கல்யாண், சிங்கப்பூர் சென்று தனது இளைய மகனை அங்கிருந்து இந்தியாவுக்கு அழைத்து வந்தார். தற்போது ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் மார்க் சங்கர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சூழலில் பவன் கல்யாணின் மனைவியான ரஷ்யாவை சேர்ந்த அன்னா லெஸ்னவா ஹைதராபாத்தில் இருந்து நேற்று முன்தினம் தனியாக திருமலைக்கு வந்தார். இவர் வேற்று மதத்தை சேர்ந்தவர் என்பதால், தனக்கு ஏழுமலையான் மீது நம்பிக்கை உள்ளது என்று திருப்பதி தேவஸ்தான பதிவேட்டில் கையெழுத்திட்டார். அதன் பின்னர், தலைமுடி காணிக்கை செலுத்தினார்.

அன்றிரவு திருமலையில் தங்கிய அவர், நேற்று காலை ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தரிசன ஏற்பாடுகள் செய்ததோடு, ரங்கநாயக மண்டபத்தில் தீர்த்த, பிரசாதங்கள் வழங்கி கவுரவித்தனர். இதனை தொடர்ந்து நேற்று மதியம் திருமலையில் பக்தர்களுக்கு வழங்கும் இலவச அன்னதான திட்டத்துக்கான முழு செலவையும் அவர் ஏற்றுக் கொண்டார்.

அதற்காக ரூ.17 லட்சத்துக்கான காசோலையை தேவஸ்தான அதிகாரிகளிடம் அவர் வழங்கினார். பின்னர் அவரே பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கினார். தன்னுடைய இளைய மகன் மார்க் சங்கர் தீ விபத்தில் உயிர் தப்பினார் என்றும், இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், விரைவில் குணமாக வேண்டியும் திருப்பதி ஏழுமலையானை மனதார வேண்டி கொண்டதாக அன்னா லெஸ்னவா தெரிவித்தார்.