அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாட்டின் ஜவுளி உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு மகத்தானது. இந்த தொழில் மூலம் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், சர்வதேச அளவில் இறக்குமதி பஞ்சு விலை (356 கிலோ) ரூ.59 ஆயிரத்தில் இருந்து ரூ.67 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதனால், உள்நாட்டிலும் பஞ்சு விலை ரூ.55 ஆயிரத்தில் இருந்து ரூ.60 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
தமிழக நூற்பாலைகளில் பஞ்சுகையிருப்பு முற்றிலும் தீர்ந்துவிட்டதால், அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. அதனால்நூற்பாலைகளின் உற்பத்திச் செலவு அதிகரித்து, ஜவுளித்தொழிலில் ஈடுபட்டுள்ளோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, பஞ்சு விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றுஜவுளித் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் வலியுறுத்தி வருகின்றனர். பஞ்சு விலை உயர்வால் ஆடைகளின் விலை கடந்த சில நாட்களாக 20 சதவீதம் உயர்ந்துள்ளது.
இதனால் பண்டிகை, திருமணங்களை முன்னிட்டு ஆடை வாங்குவோரின் சுமை கூடிக்கொண்டே செல்கிறது. கரோனாவின் தாக்கம்ஓரளவு குறைந்துள்ள நிலையில்,கூடுதல் சுமையை தாங்கிக்கொள்ளும் நிலையில் மக்கள் இல்லை.
ஜவுளித் தொழில் மூலம் தமிழக அரசுக்கு அதிக வருவாய் கிடைப்பதையும், இத்தொழிலில் தமிழகத்தின் பங்கு அதிகம் என்பதையும் கருத்தில் கொண்டு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே, தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, பஞ்சு விலையைக் குறைக்கவும், ஆடை விலை உயராமல் பார்த்துக் கொள்ளவும், ஜவுளித் தொழில் வளர்ச்சி அடையவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.