Site icon Metro People

“சென்னையில் ஏரிகளை தூர்வாரி மழைநீரை சேமிக்க நடவடிக்கை” – அமைச்சர் கே.என்.நேரு

சென்னையில் உள்ள பாசனத்திற்கு பயன்படாத ஏரிகளை தூர்வாரி அதில் மழைநீரை சேமித்துவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற வளர்ச்சித்துறையின் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, உள்ளாட்சி துறைக்கு கடந்த காலங்களை விட குறைவான நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் வரும் காலங்களில் கூடுதல் நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

அம்மா உணவகம் குறித்து எந்த தகவலும் இல்லை எனவும் உள்ளாட்சி தேர்தலை எப்போது நடத்தினாலும் நிதி கிடைத்துவிடும் எனவும் அவர் கூறினார். மேலும் சென்னை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படா வண்ணம் கடந்த ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களையும் எஸ்.பி.வேலுமணி விளக்கினார்.

அதற்கு பதிலளித்து பேசிய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, சென்னையில் கோடைகாலங்களில் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையை போக்க சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பாசனத்திற்கு பயன்படாத 500-க்கும் மேற்பட்ட ஏரிகளை தூர்வாரி, மழைகாலங்களில் நீரை சேமித்து குடிநீர் தேவைக்காக பயன்படுத்த உள்ளதாக பதிலளித்தார்.

அடுத்த 25 ஆண்டுகளுக்கு சென்னை மாநகர மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு விளக்கினார்.

Exit mobile version