Site icon Metro People

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், திண்டுக்கல் மாவட்டம் களத்துப்பட்டியை சேர்ந்த அதிமுக உறுப்பினர் எஸ்.சூரியமூர்த்தி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “அதிமுக கட்சியில் நிறுவனர் எம்ஜிஆர், பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆகியோர் உருவாக்கிய விதிகளுக்கு முரணாக ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் இரட்டை தலைமை முறையை அகற்றிவிட்டு, ஒற்றை தலைமையை உருவாக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும். இந்த கோரிக்கையுடன் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி கட்சி முடிவுகளை எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் இடைக்காலக் கோரிக்கையும் வைத்துள்ளேன்.

இந்த வழக்கில் இறுதி முடிவெடுக்கும் வரை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கக் கூடாது. அவரை தேர்ந்தெடுக்கும் வகையில் ஜூலை 11-ம் தேதி நிறைவேற்றப்பட்ட 3,4,5,6 மற்றும் 7-வது தீர்மானங்களை ஏற்க கூடாது என உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு இன்று பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி கிருஷ்ண குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான சூரிய மூர்த்தி, “ஆங்கிலத்தில் உள்ள சில தீர்ப்புகளை தமிழில் மொழி பெயர்த்து படிக்க வேண்டியுள்ளது. எனவே, இந்த வழக்கை ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், நீண்ட அவகாசம் கேட்கக்கூடாது என மனுதாரருக்கு அறிவுறுத்தி, விசாரணையை இரண்டு வார காலத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Exit mobile version