சேலம்: மேட்டூர் அருகே நீட் அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவன் தனுஷ் குடும்பத்துக்கு அதிமுக ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளது. மாணவன் குடுமபத்துக்கு ரூ.10 லட்சம் நிதி அளிக்கப்படும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அறிவித்துள்ளனர். எந்த துயரம் வந்தாலும் அதனை தாங்கும் அளவு மாணவர்கள் போராட்ட குணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களும், மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு அல்லும் பகலும் அயராது உழைத்திட்ட இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களும், மாணவ, மாணவியர் அனைவரும் சிறந்த கல்வி பயில்வதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தாயுள்ளத்தோடு செய்து கொடுத்து, இளைய தலைமுறையினர் அனைவரது உள்ளங்களிலும் நிலைத்து, நீடித்து வாழ்ந்து வருகின்றனர். அந்த வகையில், இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நல்லாசியோடு செயல்பட்டு வரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மாணவ, மாணவியரின் நலன்களைப் பாதுகாப்பதிலும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் மிகுந்த அக்கறையோடு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், சேலம் மாவட்டம், மேட்டூர் சட்டமன்றத் தொகுதி கூழையூரைச் சேர்ந்த விவசாயி சிவக்குமார் என்பவரது இரண்டாவது மகன் தனுஷ் என்பவர் திமுக-வின் பொய்யான தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான, நீட் தேர்வுக்கு விலக்கு என்பதை நம்பி மேல்நிலைத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றும் இந்த அரசால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற உள்ளதை நாள்தோறும் எண்ணி, மனம் நொந்து வாழ்க்கையில் பல எல்லைகளைக் கடந்து சாதித்து, இந்த நாட்டிற்காகவும், தமிழக மக்களுக்காகவும் மகத்தான மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு வாழ்ந்த மாணவன் தனுஷ் தன்னுடைய இன்னுயிரை மாய்த்துக் கொண்டார். அன்னாரின் மரணத்திற்கு திமுக-வும், அதன் அரசும் தான் முழு பொறுப்பேற்க வேண்டும்.
அன்னாரின் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியும், அவரது குடும்பத்திற்கு, அவர் இருந்து ஆற்ற வேண்டிய பணிக்கு ஒப்பாக தகுதியுடைய ஒருவருக்கு அரசு வேலை வழங்கியும், அவர்தம் குடும்பம் எந்தவித சிரமமும் இன்றி எதிர்காலத்தைக் கடக்க வழிவகை செய்ய வேண்டும். இந்தத் துயரமான சம்பவத்தைக் கருத்தில்கொண்டு அனைவரையும் தன் கண் எனக் காக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மறைந்த தனுஷ் அவர்களின் மரணத்திற்கு எதைக் கொடுத்தாலும் ஈடுசெய்ய முடியாது என்ற எண்ணம் எங்களுக்கு இருந்தபோதிலும், அவர்தம் குடும்பத் துரயத்தில் பங்குபெற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு சிறிய உதவியாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
எந்தத் துயரம் வந்தாலும் வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு போராடி, தடைகளைத் தாண்டி அம்மாவின் வழியிலே பீடுநடைபோட்டு வெற்றிபெற வேண்டும் என்கின்ற போராட்ட குணத்தை மாணவச் செல்வங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். பெற்றோர்களுக்கு காலமெல்லாம் மறக்கவே முடியாத துயரத்தை மாணவச் செல்வங்கள் வழங்கிவிடக் கூடாது என்பதை அறிவுரையாகக் கூறி, தன் இன்னுயிரை நீத்த அன்புச் செல்வம் தனுஷ் அவர்களின் மறைவிற்கு கழகத்தின் சார்பில் எங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டு, எல்லாம் வல்ல இறைவன் அவர்தம் குடும்ப உறுப்பினர்களுக்கு மன உறுதியையும், வலிமையையும் தரவேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.