நாடாளுமன்றத் தேர்தலுக்காக, அதிமுக தலைமையில் மிகப்பெரிய மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் பொம்மைக்குட்டை மேடு பகுதியில், அதிமுக பொன்விழா ஆண்டு பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், கலந்துகொண்ட அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுக தோன்றியதிலிருந்து இன்றுவரை தமிழகம் ஏற்றம் பெறுவதற்காக ஏராளமான திட்டங்களை நாம் செயல்படுத்தினோம். எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர், இந்த இயக்கம் அழிந்துவிடும், சிதைந்துவிடும் என்று கனவு கண்டவர்கள், அந்த கனவையெல்லாம் தவிடுபொடியாக்கிய, மறைந்த முதல்வர் ஜெயலலிதா, எம்ஐிஆர் ஆட்சியை தமிழ்நாட்டில் மீண்டும் நிலைநாட்டிக் காட்டினார்.
அப்போது சதிகாரர்கள் எவ்வளவோ சதி செய்தார்கள். அந்த துன்பங்களையெல்லாம் தாங்கிக்கொண்டு நமக்கு இன்பம் தந்த தலைவிதான் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அவர்மீது பல்வேறு வழக்குகள் தொடர்ந்தார்கள். தற்போது ஆட்சியில் எப்படி முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு தொடர்ந்தார்களோ, அதேபோல வழக்கு தொடர்ந்தார்கள்.
திமுகவால், அதிமுகவை எதிர்க்க முடியாத நிலை வருகின்றபோது அவர்கள் நம் மீது வழக்குப்போடுவதுதான் தொடர்கதையாக இருக்கிறது. அன்றுமுதல் இன்றுவரை அதைத்தான் கடைபிடிக்கிறார்கள். நேரடியாக அதிமுகவை எதிர்க்க தெம்பு, திரானி இல்லாத கட்சி திமுக. அரசியல் ரீதியாக நம்மை அவர்கள் எதிர்கொள்ள முடியாது. ஏதாவது ஒரு கொல்லைப்புறத்தின் வழியாக நுழைந்து நம்மை வீழ்த்தப் பார்க்கிறார்கள். அது நிச்சயமாக ஒருபோதும் நடக்காது.
அதிமுகவினர் யாரையும் நம்பாமல், தங்கள் உழைப்பால் இந்த இயக்கத்தை நிலைநிறுத்திக் கொண்டுள்ளனர். முதல்வர் ஸ்டாலின் அவர்களே, எங்கள் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள், முன்னாள் அமைச்சர்கள் தினந்தோறும், உங்கல் ஆட்சியின் அவலங்களை நாட்டு மக்களுக்கு தொழில்நுட்ப நிர்வாகிகளின் உதவியோடு கொண்டு சேர்த்து வருகிறார்கள்.
நீங்கள் எத்தனை வழக்குகள் போட்டாலும், அத்தனையும் தவிடுபொடியாக்கி அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும். காற்றுக்கு எப்படி தடை போட முடியாதோ, அதுபோல அதிமுக ஆட்சிக்கு வருவதை எவராலும் தடுக்க முடியாது. ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் அதிமுகவுக்கு இன்று செல்வாக்கு குறைந்தவிட்டதாக சொல்வார்கள். அப்படி கூறுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர். முதல்வர் ஸ்டாலினின் அதிகாரம் மற்றும் மிரட்டல் காரணமாக, ஊடகங்களையும், பத்திரிகைகளையும் மிரட்டி அவதூறு செய்தியை பரப்பி வருகின்றனர்.
அதிமுகவுக்கு எந்தளவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கும், சக்தியும் இருக்கிறது என்பதை இன்று நடைபெறும் கூட்டம் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. அடுத்து வருகின்ற எந்த தேர்தல்களாக இருந்தாலும், அதிமுகதான் வெல்லும் என்பதற்கு சாட்சியாக்தாதான் நாமக்கல்லில் நடைபெறும் கட்சியின் 51-ம் ஆண்டு விழா தொடக்க கூட்டத்தைப் பார்க்கிறேன்.
நாடாளுமன்றத் தேர்தலுக்காக, அதிமுக தலைமையில் மிகப்பெரிய மெகா கூட்டணி அமைக்கப்படும். நாமக்கல்லில் நடக்கும் இந்த கட்சியின் 51-ம் ஆண்டு விழா தொடக்க கூட்டம், அடுத்து வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிள்ளையார் சுழி போடுகின்ற கூட்டமாக இருக்கிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில், நாமக்கல் தொகுதியில் யார் போட்டியிட்டாலும், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வெற்றி பெறுவார்” என்று பேசினார்.