திமுக அரசுக்கு எதிராக ஓபிஎஸ் – ஈபிஎஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, நீட் தேர்வு ரத்து, பெட்ரோல் விலை ரூ.5, டீசல் விலை ரூ.4 குறைப்பதாக அளித்த வாக்குறுதி, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம் தருவதாக அளித்த வாக்குறுதி, குடும்பப் பெண்களுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை உள்ளிட்ட பெண்களுக்கு அளித்த வாக்குறுதிகள், விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என அதிமுக குற்றம் சாட்டி வருகிறது.
மேலும், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது, அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை சொத்துக்குவிப்பு வழக்குப் பதிவு செய்ததை அதிமுக கண்டித்தது.
இந்நிலையில், திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி, இன்று (ஜூலை 28) காலை 10 மணி அளவில், அதிமுகவினர் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், ஊராட்சி ஆகிய பகுதிகளில், தங்கள் வீடுகளின் முன்னே பதாகைகளை ஏந்தி கவன ஈர்ப்பு முழக்கங்களை எழுப்பி, தமிழக மக்களின் உரிமைக் குரல்களாய் ஒலிக்க வேண்டும் என, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கேட்டுக்கொண்டனர்.
அதன்படி, இன்று ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் போடியிலும், எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்தில் தன் இல்லத்தின் முன்பும் திமுக அரசுக்கு எதிரான பதாகைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓபிஎஸ் பேசுகையில், “திமுகவும் மு.க.ஸ்டாலினும் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், ஜனநாயக விரோதப் போக்கினை தமிழகம் முழுவதும் கட்டவிழ்த்துள்ள சூழல் நிலவுகிறது. அதனை மக்களின் கவனத்துக்குக் கொண்டு வருவதற்கும், சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கும், தமிழகம் எங்கும் கரோனா கட்டுப்பாடுகளை மதித்து ஆர்ப்பாட்டம் எழுச்சியுடனும் வெற்றிகரமாகவும் நடைபெறுகிறது” என்றார்.
மேலும், “சொன்னதைச் செய் திமுகவே, நீட் தேர்வை ரத்து செய், ஏமாற்றாதே ஏமாற்றாதே தமிழக மாணவர்களை ஏமாற்றாதே, அண்ணாச்சி அண்ணாச்சி சொன்னதெல்லாம் என்னாச்சி, விண்ணை முட்டுது விலைவாசி” போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதேபோன்று, எடப்பாடி பழனிசாமியும் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
இதேபோன்று, தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் தங்கள் இல்லங்களின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.