நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அதிமுக உறுதியாக இருப்பதாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
நீட் தேர்வு தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்க, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ,சென்னை தலைமைச் செயலகத்தின் நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட 13 கட்சிகளின் சட்டமன்றப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
அதிமுக சார்பில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் , “நீட் தேர்வு ரத்து நிலைப்பாட்டில் அதிமுக உறுதியாக உள்ளது. நீட் விலக்கு விவகாரத்தில் அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் அதிமுக துணை நிற்கும். நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் வரை, அரசு நீட் தேர்வு பயிற்சி மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். மாணவர்கள் தவறான எண்ணங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க உளவியல் பயிற்சிகள் அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.