Site icon Metro People

பயிர் உற்பத்தியில் முதல் 3 இடங்களை அடைய இலக்கு: அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை தொடங்கிவைத்த முதல்வர் பேச்சு

 பயிர்களின் உற்பத்தித் திறனில் தேசிய அளவில் முதல் மூன்று இடங்களை அடைய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை சென்னை, தலைமை செயலகத்தில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் மூலம் கூடுதலாக 11 லட்சம் ஹெக்டேர் நிலங்களை சாகுபடிக்குக் கொண்டு வருதல் உட்பட 3 அம்ச திட்டங்கள் செயல்படுத்தபடவுள்ளன.

இந்தத் திட்டத்திற்கு ரூ.227 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் 1997 கிராமங்களில் 9 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். அனைத்து கிராமங்களிலும் ஒட்டு மொத்த வேளாண் வளர்ச்சியை உருவாக்கிட அனைத்துத் துறைகளின் ஒருங்கிணைப்புடன் செயல்படுத்தப்பட்டு தன்னிறைவு பெற்ற கிராமமாக மாற்ற வேண்டும் என்பதே ஆகும்.

இத்திட்டமானது வேளாண் துறை, தோட்டக்கலை துறை, வேளாண் பொறியியல் துறை, விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சி துறை, தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, கால்நடை பராமரிப்பு துறை, முன்னோடி வங்கி, வனத்துறை உள்ளிட்ட துறைகள் இணைந்து செயல்படுத்தபடவுள்ளது.

இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் பேசுகையில், “இருபோக சாகுபடி பரப்பை 20 லட்சம் ஹெக்டேராக உயர்த்த திட்டமிட்டப்பட்டுள்ளது. பயிர்களின் உற்பத்தித் திறனில் தேசிய அளவில் முதல் மூன்று இடங்களை அடைய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 1,997 கிராமப் பஞ்சாயத்துகளில் 9 லட்சம் விவசாய குடும்பங்கள் பயன்பெறும்.

குறுவை சாகுபடிக்காக நாளை மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளது விவசாயிகள் நலனுக்காக 7 தொலைநோக்கு திட்டங்களை உருவாக்கி உள்ளோம். வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து விவசாயிகளை பெருமைப்படுத்தியது திமுக அரசு” என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பயனாளிகளுக்கு தரிசு தொகுப்பிற்குட்பட்ட விவசாய சங்க உறுப்பினர்களுக்கு ஆழ்துளைக் கிணறு அமைத்திட பணி ஆணை, தென்னங்கன்றுகள், தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்திட ஊக்கத்தொகை, வரப்பு ஒரங்களில் பழச்செடிகள் மற்றும் மரக்கன்றுகள் நட்டிட மரக்கன்றுகள், ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியத்தில் கிணறு அமைத்து மின் மோட்டாருடன் நுண்ணீர் பாசன வசதி அமைப்பதற்கான பணி ஆணை, பண்ணைக் குட்டை அமைப்பதற்காக ஆணை, அக்ரி கிளினிக் அமைக்க ஆணை ஆகியவற்றை முதல்வர் வழங்கினார்.

Exit mobile version