மோகன்லால் நடிப்பில் பிருத்விராஜ் இயக்கிய படம், ‘எம்புரான்’. மார்ச் 27-ல் இந்தப் படம் வெளியானது. இதில் 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்தை மையப்படுத்தி சில காட்சிகள் இடம் பெற்றன. வில்லன் பெயரை ‘பாபா பஜ்ரங்கி’ என வைத்தனர். சில இடங்களில் வரும் வசனங்களும் இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக உள்ளது என்று எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, இந்தப் படத்தின் 3 நிமிட சர்ச்சைக் காட்சிகள் நீக்கப்பட்டன.
இந்நிலையில் இதன் தயாரிப்பாளர்களில் ஒருவரான கோகுலம் கோபாலன் வீட்டில் சில நாட்களுக்கு முன் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதையடுத்து ‘எம்புரான்’ படத்தின் இயக்குநர். நடிகர் பிருத்வி ராஜுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.
இப்போது இந்தப் படத்தின் இன்னொரு தயாரிப்பாளரான ஆண்டனி பெரும்பாவூருக்கு வருமான வரித்துறை நேற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ‘லூசிஃபர்’, ‘மரைக்காயர்’ ஆகிய படங்களின் பணப் பரிவர்த்தனை விவரங்களைக் கேட்டும் ‘எம்புரான்’ படத்தின் வெளிநாட்டு உரிமை விவரங்கள், மோகன்லாலுக்கு துபாயில் ரூ.2.5 கோடி கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் பண விவரங்களைக் கேட்டு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.