சென்னை: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 93. அவரது மறைவையொட்டி பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் பலரும் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.
பிரதமர் மோடி: “குமரி அனந்தன் இந்த சமூகத்துக்கு ஆற்றிய குறிப்பிடத்தக்க சேவைக்கும், தமிழகத்தின் முன்னேற்றத்துக்கான ஆர்வத்துக்காகவும் போற்றப்படுவார். தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாச்சரத்தை பிரபலப்படுத்தவும் அவர் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.”
முதல்வர் ஸ்டாலின்: “குமரி மாவட்டத்தில் பிறந்து, பெருந்தலைவர் காமராசரின் அடியொற்றி, காங்கிரஸ் பேரியக்கத்துக்காகத் தன்னை ஒப்படைத்துக் கொண்ட அவரது மறைவு தமிழ்ச் சமூகத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். நாடாளுமன்றத்தில் தமிழில் பேசுவதற்கான உரிமையை நிலைநாட்டிய பெருமை இவரையே சாரும்.”
தமிழிசை சவுந்தரராஜன்: “என் தந்தை குமரி அனந்தன் இன்று என் அம்மாவோடு இரண்டற கலந்து விட்டார். குமரியில் ஒரு கிராமத்தில் பிறந்து தன் முழு முயற்சியினால் அப்பழுக்கற்ற அரசியல்வாதியாக தமிழ் மீது தீராத பற்று கொண்டு. தமிழிசை என்ற பெயர் வைத்து இசை இசை என்று கூப்பிடும் என் அப்பாவின் கணீர் குரல் இன்று காற்றில் இசையோடு கலந்து விட்டது.”
எடப்பாடி பழனிசாமி: “தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மிகச் சிறந்த இலக்கியவாதியுமான குமரி அனந்தன் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன். பாசமிகு தந்தையாரை இழந்து சொல்லொண்ணா துயரில் வாடும் அன்புச் சகோதரி தமிழிசைக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.”
ராமதாஸ்: “வாழ்நாள் முழுவதும் மக்கள் நலனுக்காகவும், தமிழகத்தின் நலனுக்காகவும் பாடுபட்டவர். இளம் வயதிலேயே நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்ந்தெடுக்கப்பட்ட அவர், அஞ்சல் துறை படிவங்களை தமிழில் வெளியிட வேண்டும் என்று போராடி வெற்றி பெற்றவர். விமானங்களில் தமிழில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் போராடியவர்.”
அண்ணாமலை: “தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், அப்பழுக்கின்றி பணியாற்றியவர். பல்வேறு தமிழ் இலக்கியங்கள் சார்ந்த நூல்களை எழுதியவர்.”
வைகோ: “முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்த வேண்டும் என வாழ்நாள் எல்லாம் அதற்காக குரல் கொடுத்தவர்; மது இல்லா தமிழகம் காணவும், நதிகளை இணைக்கவும் கோரிக்கைகளை முன்வைத்து மூன்று முறை தமிழகத்தில் நடை பயணம் மேற்கொண்டு நடைபயண நாயகர் எனும் சிறப்புக்கு உரியவர் ஆனார்.”
செல்வப்பெருந்தகை: “தமிழகத்தில் காங்கிரஸ் இயக்கத்தின் வளர்ச்சிக்காக தமது இளமைக்காலம் முதல் தொண்டால் பொழுதளந்த மிகச்சிறந்த காந்தியவாதியான குமரி அனந்தன் தமது இறுதி மூச்சு வரை காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ஓய்வின்றி உழைத்தவர். அவரது மறைவு ஈடுசெய்யவே முடியாத பேரிழப்பாகும்.”
இரா.முத்தரசன்: “பனை தொழிலாளர் வாரியத் தலைவர் பொறுப்பில் இருந்து, பனையின் முக்கியத்துவத்தை உணர்த்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தியவர். சாதி, மதவெறி, வகுப்புவாத கொள்கைகளுக்கு எதிராக சமரசம் காணாது போராடி வந்த ஜனநாயகவாதி. நாட்டுப்பற்றும், மக்கள் நலனும் இருகண்களாக கொண்டு வாழ்ந்த, அப்பழுக்கற்ற தேச பக்தரை நாடு இழந்து விட்டது.”
பெ.சண்முகம்: “தமிழக அரசின் தகைசால் தமிழர் விருது பெற்ற அவர் மதச்சார்பற்ற சக்திகளுடன் எப்போதும் நெருக்கமாக இருந்தார். அரசியல் மேடைகளில் இலக்கியச் சுவையோடு பேசும் அவர் சிறந்த எழுத்தாளராகவும் திகழ்ந்தார். சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராகவும் திறம்பட செயல்பட்டார்.”
சீமான்: “கேளாதாரும் வேட்ப மொழியும் சொல்வன்மை கொண்ட குமரி அனந்தன், தமிழ் இலக்கியத்தில் கரை கண்டு, நல்லாட்சி நாயகன் காமராஜ், குமரி அனந்தனின் தமிழ் அமுது, சிந்தனைப் பண்ணையில் பாரதியார், சிந்தனைப் பண்ணையில் பாரதிதாசன் உள்ளிட்ட 29 அருந்தமிழ் நூல்களை இயற்றிய இணையற்ற தமிழ்ப் பேரறிஞர்.”
அன்புமணி ராமதாஸ்: “என் மீது தனிப்பட்ட முறையில் அன்பு கொண்டிருந்தவர். அண்மையில் கூட, உடல் நலிவடைந்த நிலையிலும் என்னுடன் தொலைபேசியில் பேசிய குமரி அனந்தன், தமிழகத்தில் எப்படியாவது மதுவை ஒழித்து விடுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.”
ஜி.கே.வாசன்: “தனது அரசியல் பணியாலும், மக்கள் பணியாலும், ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் சிறப்பாக பணியாற்றி, தான் சார்ந்த தொகுதிக்கும், தமிழகத்திற்கும் பல்வேறு திட்டங்களை கொண்டுவந்தவர்.”
பிரேமலதா விஜயகாந்த்: “தமிழ் இலக்கியத்தின் மீதும் தீராத பற்று கொண்டவர். ஒழுக்கத்துக்கு அடையாளமாக வாழ்ந்தவர், நல்ல மனிதர், பழகுவதற்கு இனிமையானவர், எளிமையானவர், தமிழ் மீது தீராத பற்று கொண்டவர்.”
டிடிவி தினகரன்: “தமிழ் ஆர்வலராக, தலைசிறந்த இலக்கியவாதியாக, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராக, தமிழுக்கும், தமிழக மக்களின் வளர்ச்சிக்கும் அரும்பணி ஆற்றியவர்