அதிர்ச்சியளிக்கும் புவி வெப்பநிலை உயர்வால், அடுத்த தலைமுறையைக் காக்க காலநிலை அவசர நிலை பிரகடனம் செய்ய வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
”உலகில் புவி வெப்பநிலை உயர்வு அடுத்த இரு பத்தாண்டுகளுக்குள் 1.5 டிகிரி செல்சியஸ் என்ற அபாய கட்டத்தைத் தாண்டிவிடும் என்ற அதிர்ச்சியூட்டும் தகவலை ஐ.நா. காலநிலை மாற்றத்திற்கான பன்னாட்டு அரசுக் குழு (Intergovernmental Panel on Climate Change) வெளியிட்டிருக்கிறது. இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் வெளியேற்றும் கரியமில வாயு உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்களின் அளவு கட்டுப்படுத்தப்படாவிட்டால், நமது அடுத்தடுத்த தலைமுறைகளைப் பேரழிவிலிருந்து காப்பாற்ற முடியாது என்பது உறுதியாகும்.
புவி வெப்பநிலை உயர்வைக் கட்டுப்படுத்தாவிட்டால் சென்னை, மும்பை உள்ளிட்ட 11 இந்திய நகரங்கள் அடுத்த 80 ஆண்டுகளுக்குள் கடலில் மூழ்கிவிடும் என்பது நம்மை உலுக்கும் அதிர்ச்சி செய்தியாகும்.
காலநிலை மாற்றத்தைக் கண்காணிக்கவும், அதன் தீய விளைவுகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்துப் பரிந்துரைக்கவும் அமைக்கப்பட்டுள்ள ஐ.நா. காலநிலை மாற்றத்திற்கான பன்னாட்டு அரசுக் குழு அதன் ஆறாவது அறிக்கையை ஆக.9 (திங்கட்கிழமை) அன்று வெளியிட்டிருக்கிறது.
புவி வெப்பநிலை உயர்வு அடுத்த இரு பத்தாண்டுகளில், இன்னும் கேட்டால் 2030-களின் தொடக்க ஆண்டுகளிலேயே 1.5 டிகிரி செல்சியஸ் என்ற அபாயக் கட்டத்தை எட்டுவதற்கோ, அதைத் தாண்டுவதற்கோ வாய்ப்புகள் உள்ளன; பசுமை இல்ல வாயுக்கள் கட்டுப்படுத்தப்படாவிட்டால், 2100-வது ஆண்டுக்குள் புவி வெப்பநிலை உயர்வு 5.7 டிகிரி செல்சியஸ் என்ற அளவை எட்டும் என்பதுதான் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள எச்சரிக்கையாகும்.
புவி வெப்பநிலை உயர்வு 5.7 டிகிரி செல்சியஸ் என்ற அளவை எட்டினால் உலகம் என்னவாகும் என்பதை நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது. 19ஆம் நூற்றாண்டில் தொழிற்புரட்சி ஏற்படுவதற்கு முன்பு இருந்ததை விட இப்போது 1.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மட்டும்தான் அதிகரித்திருக்கிறது. அதன் தீய விளைவுகளையே நம்மால் தாங்க முடியவில்லை. புவி வெப்பநிலை அதிகரித்ததால் பல நாடுகளில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்குக் காட்டுத் தீ ஏற்படுகிறது; ஐரோப்பாவின் ஜெர்மனி, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டு, வீடுகளும், வாகனங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பேரழிவு நிகழ்ந்தது; சீனாவில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்திற்கும் இதுவே காரணமாகும்.
குளிர்ப் பிரதேசங்களாக அறியப்பட்ட அமெரிக்க பசுபிக் வடமேற்குப் பகுதிகளில் வெப்பநிலை அடிக்கடி 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டுகிறது; அந்தப் பகுதிகளில் உள்ள அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் கடந்த ஜூன் மாதம் வரலாறு காணாத வெப்பம் வாட்டியது. இதுவரை மின்விசிறி கூடப் பயன்படுத்தாத குளிர்ப்பகுதியான கனடா நாட்டின் லைட்டன் கிராமத்தில் 49.60 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தகித்தது. இது பாலைவனங்களில் மட்டுமே பதிவாகும் வெப்பமாகும். இதனால் அமெரிக்கா மற்றும் கனடாவில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்; கனடாவில் பல இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டது.
நம்முடைய தமிழ்நாட்டில் இப்போது ஆகஸ்ட் மாத மத்தியில் வெப்பம் வாட்டுகிறது; ஆடிக் காற்றில் அம்மியே பறக்கும் என்ற நிலை மாறி ஆடி மாதத்தில் காற்றையே காணவில்லை; ஜூன் மாதத்தில் வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகிறது என்பது உள்ளிட்ட இயற்கை மாற்றங்கள் ஏற்படுகின்றன. புவி வெப்பநிலை 1.5% என்ற அளவுக்கு உயர்ந்தால் இந்த தீயவிளைவுகள் இன்னும் பல மடங்கு அதிகரிக்கும். இந்த அளவுக்கு அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகள் நடந்து வரும் நிலையில் நம்மிடம் அதுகுறித்த புரிதல் இல்லை.
புவி வெப்பநிலை ஒரு டிகிரி செல்சியஸ் அதிகரித்தால், கடுமையான மழை கொட்டும் நிகழ்வுகள் 7% வரை அதிகரிக்கக்கூடும். இத்தகைய விளைவுகளால், 2050ஆம் ஆண்டுக்குள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் 60 கோடி பேர் தண்ணீர்ப் பற்றாக்குறையால் பாதிக்கப்படுவர். இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளிலும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உள்ளது. ஒருபுறம் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் நிலையில், கடுமையான உடல்நல பாதிப்புகளும் உருவாகும்.
மிக மோசமான காலநிலைகள் காரணமாக மனிதர்களுக்கு பல்வேறு வகையான நோய்களும், காயங்களும் ஏற்படும். காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளால் மோதல், வன்முறை, உள்நாட்டுக் கலகம் போன்றவைக் கூட ஏற்படக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இவற்றிலிருந்து அடுத்த தலைமுறையைக் காப்பாற்ற வேண்டுமானால், அதற்கான புவி வெப்பமயமாதல் தடுப்பு நடவடிக்கைகளை இந்தத் தலைமுறை மேற்கொள்ள வேண்டும். அது நம்மால் முடியாதது அல்ல.
புவி வெப்பநிலை உயர்வை 2 டிகிரி செல்சியஸ், மனித குலத்தின் நலன் கருதி 1.5 டிகிரி செல்சியஸ் என்ற அளவுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்பதுதான் கடந்த 2015ஆம் ஆண்டு 191 நாடுகள் கையெழுத்திட்ட பாரிஸ் உடன்படிக்கையின் நோக்கம் ஆகும். பசுமை இல்ல வாயுக்களைக் கட்டுப்படுத்தத் தீவிர நடவடிக்கை எடுப்பதன் மூலம் இந்த இலக்கை எட்டுவது இன்னும் சாத்தியம்தான் என்று ஐ.நா. குழு கூறியிருப்பது நம்பிக்கையளிக்கும் விஷயமாகும். அந்த இலக்கை நோக்கி நாம் பயணிக்க வேண்டியது அவசியமாகும். அதற்காக பெட்ரோல், டீசல், நிலக்கரி, எரிவாயு பயன்பாட்டுக்கு மிக விரைவாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அவற்றால் வெளியாகும் கரியமில வாயுவை 2050ஆம் ஆண்டில் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்.
இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் கரியமில வாயு வெளியாகும் அளவைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பொதுப்போக்குவரத்து வசதிகளை, குறிப்பாகப் பேருந்து வசதிகளை அதிகமாக்குதல், திடக்கழிவு மேலாண்மையை அறிவியல் பூர்வமாகக் கையாளுதல், தூக்கி எறியும் பிளாஸ்டிக் தடையை மும்முரமாகச் செயலாக்குதல், புதிய கட்டிடங்களை பசுமைக் கட்டிடங்களாக அமைக்க வழிசெய்தல், சூரிய ஆற்றலையும் காற்று ஆற்றலையும் முழுமையாகப் பயன்படுத்துதல் எனப் பல வழிகளிலும் கரியமிலவாயு அளவைக் குறைக்க வழி செய்ய வேண்டும். இவை அனைத்தையும் விட கரியமில வாயுவைக் குறைக்க வழிசெய்யும் இயற்கை வளங்களைக் காப்பாற்றவும், பசுமைப் பகுதிகளை அதிகமாக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுப்போக்குவரத்துக்கான பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து அரசு வாகனங்களையும் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களாக மாற்ற அரசு முன்வர வேண்டும். பொதுமக்களும் மின்சார வாகனங்களுக்கு மாறுவதற்கு வசதியாக வரிச்சலுகை போன்ற ஊக்குவிப்புகளை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும்.
புவி வெப்பநிலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதியாக இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் காலநிலை அவசர நிலையைப் பிரகடனப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். அதன் ஒரு கட்டமாக 25 அம்சங்கள் கொண்ட சென்னை பெருநகருக்கான தூய காற்று செயல்திட்டத்தை உருவாக்கி முழு வீச்சில் செயல்படுத்துவதற்கும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவற்றுக்கான அறிவிப்புகளை வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தமிழக அரசு வெளியிட வேண்டும்”.
இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.