Site icon Metro People

பிரதமர் மோடியுடன் அன்புமணி சந்திப்பு: தமிழக நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்ததாக தகவல்

சென்னை: டெல்லியில் பிரதமர் மோடியை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, தமிழக மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை அன்புமணி முன்வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பாமக தலைவராக அன்புமணி அண்மையில் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், அன்புமணி திடீர் பயணமாக டெல்லி சென்றுள்ளார். அங்கு பிரதமர் மோடியின் இல்லத்தில் அவரை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்றது.

இச்சந்திப்பு குறித்து பாமக தலைமை நிலையம் வெளியிட்ட அறிக்கை: இந்தச் சந்திப்பின்போது பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், அந்தப் பொறுப்பில் சிறப்பாக செயல்பட வாழ்த்துவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸின் உடல்நலன் குறித்து விசாரித்த பிரதமர், ராமதாஸின் உடல் நலனை கவனித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டதாக தெரிவிக்கும்படியும் கூறினார்.

தமிழ்நாட்டின் நலனுக்காக காவிரி – கோதாவரி இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்தும்படியும், அதற்காக சம்பந்தப்பட்ட மாநிலங்களின் முதல்வர்கள் மாநாட்டை பிரதமர் தலைமையில் நடத்த வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டார்.

காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும், அதன் ஒரு கட்டமாக அனைத்து ஆறுகளிலும் தடுப்பணைகளை கட்ட நடவடிக்கை எடுக்கும்படியும் பிரதமரிடம் அன்புமணி ராமதாஸ் கோரினார்.

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும்; தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை உடனடியாக அமைக்க வேண்டும்; ஆணையத்தில் தமிழ்நாட்டிற்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் பிரதமர் நரேந்திர மோடியிடம் அன்புமணி ராமதாஸ் அவர்கள் முன்வைத்தார். அவற்றை கனிவுடன் பரிசீலிப்பதாக பிரதமர் உறுதியளித்தார் என்று பாமக தெரிவித்துள்ளது.

Exit mobile version