மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டும் விவகாரத்தில் மத்திய அரசு நடுநிலையுடன் செயல்பட வேண்டும், என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.
இதுகுறித்து ஈரோட்டில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் முந்தைய அதிமுக அரசின் தவறான கொள்கையால், ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சீர்படுத்தும் பணியில் திமுக அரசு ஈடுபட்டுள்ளது. இதனிடையே, நிதிநிலை அறிக்கையில், தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்ட பல வளர்ச்சித்திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழக முதல்வர் அனைவரையும் அரவணைத்து செல்கிறார்.
மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்ட நிதி ஒதுக்கியுள்ளது கண்டிக்கத்தக்கது. நீதிமன்ற உத்தரவுகளை மீறி கர்நாடக அரசு செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு இந்தப் பிரச்சினையில், நடுநிலையுடன் செயல்பட வேண்டும். மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து வரும் 28 மற்றும் 29-ம் தேதி நடக்கும் பொது வேலைநிறுத்தத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்கும்.
தமிழகத்தில் ஆணவப் படுகொலையை தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும். பல்கலைக்கழக துணை வேந்தரை ஆளுநர் நியமனம் செய்யும் முறையை ரத்து செய்ய வேண்டும். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, விளம்பரப் பிரியராக உள்ளார். அவர் ஆளுநரைச் சந்தித்ததை பெரிதுபடுத்த வேண்டியதில்லை. ஏற்கெனவே எதிர்பார்த்தபடி, ஐந்து மாநில தேர்தல் முடிந்தவுடன் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.