திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள தமிழக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் எம்எல்ஏ வீடு மற்றும் அவரது உறவினர்கள் நண்பர்கள் வீடு உட்பட 49 இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இன்று காலை 5 மணி அளவில் மன்னார்குடி வடக்கு வீதியில் உள்ள அவரது இல்லத்துக்கு லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீஸார் வந்து சோதனையை தொடங்கினர்.
அதேபோல மன்னார்குடி முதல் தெருவில் உள்ள அதிமுக நகரச் செயலாளரும், ஆர்.காமராஜின் உறவினரான ஆர்.ஜி. குமார், வேட்டை திடலில் உள்ள காமராஜின் நண்பர் சத்தியமூர்த்தி தஞ்சாவூரில் உள்ள ஆர் காமராஜ் சம்மந்தியின் வீடு, நன்னிலத்தில் உள்ள காமராஜ் வீடு, தஞ்சையில் காமராஜ் புதிதாக கட்டி வரும் மருத்துவமனை, சென்னையில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட 49 இடங்களில் இந்த லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்று வருகிறது.
லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்று வரும் தகவல் அறிந்த அதிமுகவினர் ஏராளமானோர் மன்னார்குடி வடக்கு வீதியில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு கூடி நின்றனர்.
அப்போது காமராஜ் வீட்டைவிட்டு வெளியில் வந்து கட்சியினருக்கு வணக்கம் தெரிவித்தார். வெளியில் கூடியிருந்த கட்சியினர் திமுக அரசை கண்டித்து முழக்கம் எழுப்பினர். இதனால் திருவாரூர் மாவட்ட அதிமுகவினிடையே பெரும் பரபரப்பு நிலவுகிறது.