தஞ்சை பள்ளி மாணவி தற்கொலைவழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவி, பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். மாணவியை விடுதி அறைகளை சுத்தம் செய்ய வற்புறுத்தி மன உளைச்சல் ஏற்படுத்தியதாக விடுதி வார்டன் சகாயமேரியை (62) போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில் தன்னை கிறிஸ்தவ மதத்துக்கு மாற கட்டாயப்படுத்தியதாக மாணவி பேசியதாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்துமாணவி தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றவேண்டும் என மாணவியின்தந்தை முருகானந்தம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். பின்னர்,கட்டாய மதமாற்ற முயற்சி நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துஉள்ளது. மதமாற்றம் தொடர்பாக மாணவி பேசிய வீடியோ ஆதாரம் உள்ளது. மனுதாரரும் அது தொடர்பாக போலீஸில் புகார் அளித்துஉள்ளார். அது குறித்து விசாரிக்காமல் விசாரணை அதிகாரியும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும் மதமாற்றம் தொடர்பானபுகார் இல்லை என வெளிப்படையாக தெரிவித்துள்ளனர்.
இதனால் முதலில் சிபிசிஐடி விசாரணை கோரிய மனுதாரர், இறுதி விசாரணையின்போது தமிழக போலீஸார் மீது நம்பிக்கைஇல்லை, அதனால் சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனநீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை சரியான பாதையில் செல்லவில்லை. எனவே வழக்குவிசாரணை சிபிஐக்கு மாற்றப்படுகிறது என ஜன.31-ல் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து டிஜிபி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், மாணவி தற்கொலையை தமிழக போலீஸார் சரியாக விசாரித்து வருகின்றனர். மாணவியின் வீடியோமற்றும் ஆவணங்கள் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுக்காக போலீஸார் காத்திருக்கின்றனர்.
மாணவி தஞ்சை மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்ட தகவல் கிடைத்ததும் திருக்காட்டுப்பள்ளி போலீஸார் உடனடியாக சென்று மாணவியிடம் வாக்குமூலம் பெற்றனர். நீதித்துறை நடுவரும் வாக்குமூலம் பெற்றார். அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் உடனடியாக வழக்குப் பதிவு செய்து விடுதிவார்டனை போலீஸார் கைது செய்தனர். அனைத்து கோணங்களிலும் ஏடிஎஸ்பி விசாரணை நடத்தி வருகிறார்.
இதுவரை 64 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விசாரணை முழுமையாக வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழக அரசின் வாதங்களை ஆராயாமல் வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, சிபிஐ விசாரணைக்கு மாற்றி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, தமிழக போலீஸார் தொடர்ந்து விசாரிக்க உத்தரவிட வேண்டும். அதுவரை சிபிஐக்கு மாற்றி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுஉள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. இதனிடையே சிபிஐ விசாரணைக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்தால் தன் தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது எனக் கேட்டு மாணவியின் தந்தை முருகானந்தம், உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.