Site icon Metro People

புதிய ஆளுநர் நியமனம்: ஓபிஎஸ், ராமதாஸ், அன்புமணி வாழ்த்து

தமிழகத்தின் புதிய ஆளுநருக்கு ஓபிஎஸ், ராமதாஸ், அன்புமணி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித், பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். தற்போது அவர் பஞ்சாப் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் புதிய ஆளுநருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஓ.பன்னீர்செவ்வம், ஒருங்கிணைப்பாளர், அதிமுக

நாகா அமைதி பேச்சுவார்த்தையில் முக்கிய பங்கு வகித்த ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஆர்.என்.ரவி புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதை அதிமுக சார்பில் வரவேற்கிறேன். அவரது நியமனம் நிச்சயமாக தமிழகத்தின் வளர்ச்சியை பெரிதும் உயர்த்தும். அவர் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

தனது திறமைகள், அறிவு மற்றும் ஆதரவை வழங்கிய பன்வாரிலால் புரோஹித்துக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுகவுடனான அவரது நல்லுறவு மிகவும் பாராட்டத்தக்கது. பஞ்சாப்பின் ஆளுநராக நியமிக்கப்பட்ட அவருக்கு வாழ்த்துக்கள். வரும் ஆண்டுகளில் பஞ்சாப் மாநிலம் புதிய உயரங்களை எட்ட அவரது பரந்த மனப்பான்மை நிச்சயம் உதவும் என்று நம்புகிறேன்.

ராமதாஸ், நிறுவனர், பாமக

தமிழகத்தின் 15-வது ஆளுநராக ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியான ரவீந்திர நாராயண ரவி நியமிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு பாமக சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவரான ரவி நமது அண்டை மாநிலமான கேரளத்தில் காவல்துறை அதிகாரியாக நீண்ட காலம் பணியாற்றியவர் என்பதால், தமிழகத்தைப் பற்றி நன்கு அறிந்திருப்பார். தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சி, சமூகநீதி, கல்வி, தமிழர் நாகரிகம், பண்பாடு ஆகியவற்றுக்காக தமிழ்நாடு அரசு ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. தமிழக அரசின் அத்தகைய நடவடிக்கைகளுக்கு புதிய ஆளுனர் துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அன்புமணி ராமதாஸ், இளைஞரணித் தலைவர், பாமக

தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தேசியப் பாதுகாப்புக்கான முன்னாள் துணை ஆலோசகர் ரவீந்திர நாராயண ரவியின் பணி சிறக்க எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காவல்துறை அதிகாரியாகவும், தேசப் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்புகளிலும் 45 ஆண்டுகள் பணியாற்றிய ரவிக்கு மாநில அரசு நிர்வாகம் குறித்து ஆழ்ந்த அனுபவம் இருக்கும். ஜம்மு – காஷ்மீர், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் அமைதியை ஏற்படுத்துவதற்காக அவர் மேற்கொண்ட பணிகள் அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றவை. இத்தகைய சிறப்பு மிக்க ஆளுநர் ரவி தமிழகத்தின் அனைத்துத் துறை வளர்ச்சிக்கும் துணையாக இருப்பார்; மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே இணைப்புப் பாலமாக சிறப்பான முறையில் பணியாற்றுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version