சென்னை: சென்னை வந்துள்ள பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, தமிழிசை சவுந்தரராஜனின் இல்லத்துக்குச் சென்று அவருக்கு நேரில் ஆறுதல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து துக்ளக் ஆசிரியர் எஸ். குருமூர்த்தியின் இல்லத்தக்குச் சென்று அங்கு தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து பல்வேறு கட்சிகளின் தலைவர்களை சந்தித்துப் பேச இருக்கிறார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 2 நாள் பயணமாக நேற்றிரவு தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், எச்.ராஜா, வானதி சீனிவாசன், பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கிய அமித் ஷா, இன்று (ஏப்.11) காலை சென்னை சாலிகிராமத்தில் உள்ள பாஜக மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜனின் வீட்டுக்குச் சென்றார். தமிழிசையின் தந்தையும் மூத்த காங்கிரஸ் தலைவருமான குமரி அனந்தன் கடநத 9-ம் தேதி மறைந்ததை அடுத்து அவருக்கு நேரில் ஆறுதல் தெரிவித்தார். அப்போது, தமிழிசை சவுந்தரராஜனனின் கணவர் உட்பட குடும்ப உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
குருமூர்த்தியுடன் ஆலோசனை.. இதனைத் தொடர்ந்து அவர், மயிலாப்பூரில் உள்ள துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தியின் வீட்டுக்குச் சென்றார். அங்கு, தமிழக அரசியல் நிலவரம் குறித்து அவருடன் அமித் ஷா ஆலோசனை நடத்தினார். அப்போது, அதிமுக உடனான கூட்டணி தொடர்பாகவும், அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையனின் அடுத்த கட்ட அரசியல் நகர்வு தொடர்பாகவும் இருவரும் ஆலோசனை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
வாசன் முதல் இபிஎஸ் வரை.. இந்த சந்திப்பை அடுத்து, அமித் ஷாவை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் சந்தித்துப் பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமித் ஷாவை சந்திக்க ஓ பன்னீர் செல்வம் முயற்சி செய்து வருவதாகவும் இதுவரை அதற்கு அனுமதி வழங்கவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரத்தில், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக தலைவர்களை அமித் ஷா சந்திக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்த தலைவர் யார்? பாஜக தலைவர் பதவியில் உள்ள அண்ணாமலை, அதிமுக உடன் கூட்டணி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருவதாகக் கூறப்படுகிறது. எனினும், திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணி முக்கியம் என தேசிய தலைமை கூறியதாகவும், அதற்கு அதிமுக உடன் கூட்டணி அமைப்பதானால் தான் தலைவர் பதவியில் தொடர விரும்பவில்லை என்றும் அண்ணாமலை கூறியதாகவும் கூறப்படுகிறது. அவரை சமாதானப்படுத்துவதற்காக கடந்த 2 மாதங்களாக மேற்கொண்ட முயற்சி வெற்றி பெறாததை அடுத்து, புதிய மாநில தலைவரை தேர்வு செய்ய பாஜக முடிவு செய்துள்ளது.
இதனிடையே, பாஜக மாநிலத் தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட விரும்புவர்கள், இன்று (ஏப்.11) பகல் 2 மணி முதல் மாலை 4 வரை விருப்ப மனுக்களை தாக்கல் செய்யலாம் என்று அக்கட்சியின் மாநில துணைத் தலைவரும், மாநில தேர்தல் அதிகாரியுமான எம்.சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “பாஜகவின் அமைப்பு பருவ தேர்தல் இறுதிக் கட்டத்தை நாம் அடைந்துள்ளோம். கிளை தொடங்கி மாவட்டத் தலைவர், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வரையிலான தேர்தல் முடிந்து தற்பொழுது இறுதியாக மாநிலத் தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் வரவேற்கப்படுகிறது.
மேற்கண்ட தேர்தலுக்கான விருப்பமனுக்களை கட்சியின் இணையதளமான www.bjptn.com என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நாளை (ஏப்.11) வெள்ளிக்கிழமை மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை போட்டியிட விருப்பமுள்ளவர்கள் விருப்பமனுவை மாநிலத் தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
பாஜகவின் அடுத்த மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்படுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இணைவது, தொகுதிப் பங்கீடு, தேர்தல் பணிகள் என அனைத்துக்கும் இந்த நகர்வு பொருத்தமாக இருக்கும் என பாஜக மேலிடம் கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.