நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் சீசன் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த்துக்கு சிறப்பானதாக அமையவில்லை. முதல் 3 ஆட்டங்களில் மிகக்குறைந்த ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பியதால் அவருக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது. ஆனால், அவர் ஃபீனிக்ஸ் பறவையாக மீண்டு வந்து ஐபிஎல் போட்டிகளில் சாதனை படைப்பார் என்று அவரது ரசிகர்களும், விமர்சகர்களும் கணிக்கின்றனர்.
18 ஆண்டு கால ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஏலத்தின்போது மிக அதிக தொகைக்கு எடுக்கப்பட்டவர் ரிஷப் பந்த். அவரை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி நிர்வாகம் ரூ.27 கோடிக்கு எடுத்திருந்தது. அவரது திறமை, கள வியூகம், பேட்டிங் டெக்னிக், அதிரடி ஆட்டம் ஆகியவற்றை மனதில் கொண்டு அவரை அதிக தொகைக்கு லக்னோ அணி எடுத்திருந்தது.
கடந்த 2024-ம் ஆண்டு வரை டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வந்த ரிஷப் பந்த், இந்த ஆண்டுதான் லக்னோ அணிக்கு மாறினார். ஆனால் நடப்பு ஐபிஎல் சீசன் அவருக்கு சிறப்பானதாக அமையவில்லை. இதுவரை லக்னோ அணி விளையாடிய 3 லீக் போட்டியிலும் சேர்த்து அவர் மொத்தம் 17 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளார். இதனால் அவருக்கு நெருக்கடி எழுந்துள்ளது.
ஐபிஎல் சீசனை வெற்றியுடன் தொடங்கினால்தான் அது தொடர் முழுக்க ரசிகர்களை உற்சாகத்துடன் வைத்திருக்கும். ஆனால் இதுவரை லக்னோ அணி விளையாடிய 3 போட்டிகளில் 2-ல் தோல்வி, ஒரு போட்டியில் வெற்றியைப் பெற்றுள்ளது.
லக்னோ அணியின் மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், எய்டன் மார்கிரம், ஆயுஷ் பதோனி, டேவிட் மில்லர், அப்துல் சமத் ஆகியோர் அதிரடியாக விளையாடி வருகின்றனர்.
ஆனால் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு கேப்டன் பதவியையும் கொடுத்த லக்னோ அணி நிர்வாகத்துக்கு ரிஷப் பந்த் இதுவரை நியாயம் சேர்க்கவில்லை. ரிஷப் பந்த்தின் ஏமாற்றம் தரும் ஆட்டத்தால், லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா அதிருப்தியுடன் உள்ளதாகத் தெரிகிறது.
ஆனால், தற்போதுள்ள மிகச்சிறந்த ஆட்டக்காரர்களில் பந்த்தும் ஒருவர். இக்கட்டான நேரங்களில் அவரது அதிரடி ஆட்டத்தால் ஐபிஎல் போட்டிகளிலும் சரி, தேசிய அணிக்காக விளையாடும்போது சரி.. வெற்றியைத் தேடிக் கொடுத்துள்ளார்.
அவர் ஃபார்ம் இன்றி தவிப்பது சில போட்டிகளில்தான். அவர் ஃபீனிக்ஸ் பறவையாக மீண்டு வந்து அதிரடி ஆட்டத்தால் ஜொலிப்பார் என்று கிரிக்கெட் விமர்சகர்களும், ரசிகர்களும் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
இதுபோன்றுதான் அவர் கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற மிக மோசமான ஒரு சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்து மீண்டு வந்தார். ரிஷப் பந்த்தின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று பலர் வாய் விட்டு சொல்லத் தொடங்கிவிட்டனர். ஆனால், அதீதமான நம்பிக்கை, விடாமுயற்சி, தொடர்ந்து கிரிக்கெட் பயிற்சி, அசராத மன உறுதியுடன் விபத்து காயங்களில் இருந்து ஃபீனிக்ஸ் பறவை போல மீண்டு வந்து தேசிய அணியில் இடம்பிடித்தார்.
கார் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்தநிலையில் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “கார் விபத்தில் சிக்கியபோது படுகாயம் அடைந்தேன். முதல் முறையாக இந்த உலகத்தில் எனக்கான நேரம் முடிந்துவிட்டதாக உணர்ந்தேன். எனக்கு அதிர்ஷ்டம் இருந்ததால் பெரிய அளவில் பயப்படும் படியான அளவுக்கு ஒன்றும் ஆகவில்லை. எனது மூச்சு கிரிக்கெட்தான். கிரிக்கெட்டுக்காகத்தான் வாழ்கிறேன். அது இல்லாத வாழ்க்கையை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. விரைவில் களத்துக்குத் திரும்புவேன்” என்றார். அவர் கூறியது போலவே காயத்திலிருந்து குணமடைந்த சில மாதங்களிலேயே தேசிய அணிக்காக விளையாடினார்.
அவர் கூறியதுபோலவே கிரிக்கெட்தான் அவருடைய மூச்சாக இருக்கிறது. கிரிக்கெட் விளையாட்டுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்தான் ரிஷப். இன்று வரை டெஸ்ட், ஒருநாள், சர்வதேச டி20 என தேசிய அணிக்காக விளையாடி வருகிறார் ரிஷப். 43 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரிஷப் பந்த் 2,948 ரன்களைக் குவித்துள்ளார். அதேபோல் 31 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி 871 ரன்களும், 76 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 1,209 ரன்களும் குவித்துள்ளார்.
இதுவரை 205 டி20 போட்டிகளில் (ஐபிஎல் உட்பட) பங்கேற்று 31.29 சராசரியுடன் 5,039 ரன்களை விளாசி அதிக அனுபவம் பெற்றவராக விளங்குகிறார். கடந்த ஜனவரியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், 29 பந்துகளில் அரை சதம் அடித்து அணித் தேர்வுக்குழுவினரின் நம்பிக்கையைக் காப்பாற்றினார்.
எனவே, இனி வரும் ஐபிஎல் லீக் ஆட்டங்களில் ரிஷப் பந்த் தனது முழுத் திறமையையும் களத்தில் வெளிப்படுத்துவார் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.