Site icon Metro People

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காமல் இழுத்தடித்த இன்சூரன்ஸ் நிறுவன தலைவர் உட்பட 3 பேருக்கு பிடிவாரண்ட்: அரியலூர் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

அரியலூர்: விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீடு இழப்பீடு வழங்காமல் இழுத்தடித்த இன்சூரன்ஸ் நிறுவனத் தலைவர், விவசாய காப்பீட்டு நிறுவன மண்டல மேலாளர், அரியலூர் கிளை மேலாளர் ஆகியோருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து, அரியலூர் நுகர்வோர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 60 விவசாயிகள் கடந்த 2012-ம் ஆண்டு தங்களின் விவசாயப் பயிர்களுக்கு யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் விவசாய காப்பீட்டு நிறுவனத்தில் இணைந்த பாலிசியை எடுத்துள்ளனர். அப்போது, விவசாயத்தில் ஏற்பட்ட பயிர்ச் சேதங்களுக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, உரிய இழப்பீட்டுத் தொகையைக் கேட்டு விவசாயிகள் 60 பேரும் தங்களின் பிரதிநிதியாக சுப்பிரமணி என்பவரை நியமித்து, அவர் மூலமாக அரியலூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில், 60 விவசாயிகளுக்கும் இழப்பீட்டுத் தொகையாக ரூ.10 லட்சத்துக்கு மேல் வழங்க வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் கடந்த 2018-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியிருந்தது.

ஆனாலும், விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்காததால், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் மற்றும் விவசாய காப்பீட்டு நிறுவனம் ஆகியவற்றின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நுகர்வோர் நீதிமன்றத்தில் 2020-ம் ஆண்டு விவசாயிகள் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு மீதான விசாரணையில், காப்பீட்டு நிறுவனங்கள் தங்களின் பதிலை சமர்ப்பிக்கவில்லை.

இதையடுத்து, அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி வீ.ராமராஜ், போதிய அவகாசம் வழங்கியும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பதில் மனு தாக்கல் செய்யாததால், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைவர், விவசாய காப்பீட்டு நிறுவனத்தின் மண்டல மேலாளர், அரியலூர் கிளை மேலாளர் ஆகியோருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நேற்று உத்தரவிட்டார். இந்த உத்தரவை ஒரு மாதத்துக்குள் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் ஆணை பிறப்பித்துள்ளார்.

Exit mobile version