Site icon Metro People

ஆஸ்திரேலியா | புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டார் அந்தோணி அல்பானீஸ்

கான்பெரா: ஆஸ்திரேலிய நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டுள்ளார் அந்தோணி அல்பானீஸ் (Anthony Albanese).

59 வயதான அந்தோணி அல்பானீஸ், நியூ சவுத் வேல்ஸ் பகுதியை சேர்ந்தவர். 1996 வாக்கில் ஆஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினராக அவர் தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து அமைச்சர், அவைத்தலைவர், துணை பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை கவனித்துள்ளார். இப்போது ஆஸ்திரேலிய நாட்டின் 31-வது பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். ஆஸ்திரேலியாவின் தொழில் கட்சியை சார்ந்தவர். 2019 முதல் அவர் அக்கட்சியின் தலைவராக உள்ளார். எளிய பின்புலத்தை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் வகையில் அந்தோணி அல்பானீஸ் பிரதமராக பதவியேற்றுக் கொண்டுள்ளார். காலநிலை மாற்ற விவகாரத்தில் உலகத்துடன் இணைந்து பயணிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கான்பெராவில் உள்ள அரசு இல்லத்தில் அவர் நாட்டின் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.

குவாட் மாநாட்டில் இந்தியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகள் பங்கேற்கின்றன. இதற்காக பிரதமர் மோடி, ஜப்பான் பயணித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் இதில் பங்கேற்கிறார். ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவும் இதில் பங்கேற்கிறார்.

Exit mobile version