Site icon Metro People

வெளிநாடு, வெளி மாநிலங்களுக்குப் பறக்கும் பனையூர் நூல் கயிறு

மதுரை மாவட்டம், பனையூரில் தயாராகும் நூல் கயிறு வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் விற்பனைக்காக அனுப்பப் படுகிறது. இங்கு சீமைக் கருவேல மரங்களையே திறந்தவெளி தொழிற் கூட மாக்கி தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர்.

நூல் கயிறு உற்பத்தித் தொழிலில் மதுரை சிந்தாமணி அருகே உள்ள பனை யூர் சிறந்து விளங்குகிறது. இங்குள்ள இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள் என சுமார் 300-க்கும் மேற் பட்டோருக்கு இந்த தொழில் வேலைவாய்ப்பு அளிக்கிறது.

இங்கு மங்களகரமான மஞ்சள் தாலி கயிறு முதல் மஞ்சு விரட்டு, ஜல்லிக்கட்டு காளைகளை கட்டுப்படுத்துவதற்கான கழுத்துக் கயிறு வரைக்கும் பம்பரத்துக் குரிய சாட்டைக் கயிறு முதல் பாய்மரக் கப்பலை நங்கூரமிட்டு நிறுத்த பயன்படும் வடக் கயிறு, குழந்தையை சீராட்டும் தொட்டில் கயிறு என பலவகை கயிறுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில், உள்ளூரைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் சீமைக் கருவேல மரங்களின் நிழலிலேயே வேலை பார்க்கின்றனர்.

 

 

நூல் கயிறு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஆர்.சுந்தர் கூறியதாவது: எங்க ஊரில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக நூல் கயிறு உற்பத்தி நடந்து வருகிறது. இங்கிருந்து தமிழகத்தின் பல மாவட்டங் களுக்கும் கயிறு அனுப்பப்படுகிறது. அதேபோல், கேரளா, ஆந்திரா, தெலங்கானா, டெல்லி போன்ற வெளி மாநிலங்களுக்கும் அனுப்புகிறோம்.

சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கும் இங்கிருந்து கயிறு வாங்கிச் செல்கின்றனர். இந்த ஊரைச் சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்டோருக்கு கயிறு தயாரிக்கும் தொழில் வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Exit mobile version