புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ள பரஸ்பர வரி விதிப்பு விகிதங்களால் ஏற்படும் தாக்கங்களை கவனமாக ஆராய்ந்து வருவதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ‘அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அனைத்து வர்த்தக கூட்டாளிகளிடம் இருந்தும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10% முதல் 50% வரை கூடுதல் வரிகளை விதித்து பரஸ்பர வரிகள் குறித்த நிர்வாக உத்தரவை பிறப்பித்துள்ளார். 10% அடிப்படை வரி, ஏப்ரல் 5, 2025 முதல் அமலுக்கு வருகிறது. 10 சதவீதத்துக்கும் அதிகமாக வரி விதிக்கப்பட்டுள்ள மற்ற நாடுகளுக்கான பரஸ்பர வரி விதிப்புமுறை ஏப்ரல் 9, 2025 முதல் அமலுக்கு வரும்.
அமெரிக்க அதிபரின் நிர்வாக உத்தரவின்படி இந்தியாவுக்கு 27% வரி விதிக்கப்பட்டுள்ளது. (ட்ரம்ப் காட்டிய வரிவிகிதப் பட்டியலில் இந்தியாவுக்கு 26% என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அதிகாரபூர்வ உத்தரவில் 27% என தெரிவிக்கப்பட்டுள்ளது.) இந்திய தொழில்துறை மற்றும் ஏற்றுமதியாளர்கள் உட்பட அனைத்து பங்குதாரர்களுடனும் வர்த்தக அமைச்சகம் தொடர்பில் இருந்து வருகிறது. அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கூடுதல் கட்டண மதிப்பீட்டின் கருத்துகளைப் பெற்று நிலைமையை மதிப்பிடுகிறது. அதோடு, அமெரிக்க வர்த்தகக் கொள்கையில் ஏற்பட்டுள்ள இந்த புதிய நடைமுறை காரணமாக ஏற்படக்கூடிய வாய்ப்புகளையும் வர்த்தக அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது.
பரஸ்பர நன்மை பயக்கும், பல துறை இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை விரைவாக முடிப்பதற்காக இந்திய மற்றும் அமெரிக்க வர்த்தக குழுக்களிடையே விவாதங்கள் நடடைபெற்று வருகின்றன. இரு நாடுகளும் வர்த்தகம், முதலீடுகள் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றங்களை வளர்ப்பதற்கு உதவுவதில் பேச்சுவார்த்தைகள் கவனம் செலுத்துகின்றன. இந்தப் பிரச்சினைகள் குறித்து ட்ரம்ப் நிர்வாகத்துடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். மேலும், வரும் நாட்களில் அவற்றை முன்னோக்கி எடுத்துச் செல்ல எதிர்பார்க்கிறோம்’ என்று மத்திய அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, “டொனால்டு ட்ரம்ப்புக்கு ‘அமெரிக்கா முதலில்’, பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘இந்தியா முதலில்’ என்பது தாரக மந்திரம். நாங்கள் முதலில் அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பு நடவடிக்கையை பகுப்பாய்வு செய்வோம். பின்னர் அதன் தாக்கத்தை மதிப்பிட்டு, அதை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து பார்ப்போம்” எனத் தெரிவித்தார்.
பங்குச் சந்தையில் வீழ்ச்சி: ட்ரம்ப் வரிவிதிப்பின் தாக்கத்தால் இந்தியப் பங்குச் சந்தைகளில் வீழ்ச்சி நிலவி வருகிறது. சென்செக்ஸ் 300+ புள்ளிகள் சரிந்து 76,295.36 ஆகவும், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 80+ புள்ளிகள் சரிந்து 23,250.10 ஆகவும் இருந்தது.
ராகுல் காந்தி ரியாக்ஷன் – “நமது நட்பு நாடான அமெரிக்கா திடீரென நம் மீது வரிகளை விதிக்கிறது. அமெரிக்காவின் இந்த வரிவிதிப்பு இந்திய பொருளாதாரத்தை, குறிப்பாக வாகன உற்பத்தி, மருந்து தயாரிப்பு, விவசாயத் துறைகளை சீர்குலைக்கப் போகிறது. நம் மீது விதிக்கப்பட்டுள்ள வரிகளில் இந்தியா என்ன செய்யப்போகிறது என்பது குறித்து மத்திய அரசு விளக்க வேண்டும்” என்றார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் முக்கியத் தலைவருமான ராகுல் காந்தி.
எந்தெந்த துறைகளில் தாக்கம்? – இந்தியாவுக்கான ட்ரம்ப் அரசின் வரிவிதிப்பால், நாட்டில் எந்தெந்த துறைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என க்ளோபல் டிரேட் ரிசேர்ச் இனிஷியேடிவ் என்ற அமைப்பு கணித்துள்ளது. அதன்படி இந்தியாவில் வேளாண் துறை, அதிலும் குறிப்பாக மீன் இறக்குமதி துறை, இறைச்சி, பதப்படுத்தப்பட்ட கடல் உணவுத் துறை ஆகியனவற்றில் தாக்கம் இருக்கக் கூடும். தொழில் துறையில் மருந்துகள் துறை, நகை, எலக்ட்ரானிக் பொருட்கள் துறை பாதிக்கக்கூடும். ரசாயனத் துறை, மருத்துவ உபகரணங்கள், எலக்ட்ரிக்கல் மற்றும் மெஷினரி துறைகள் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.