உடுமலை: பப்பாளி கூழ் உள்ளிட்டவற்றைத் தயாரிக்கும் ஆலையில் தொட்டியில் விழுந்து வட மாநிலத் தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்தனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த சடையபாளையம் பிரிவில் தனியாருக்குச் சொந்தமான ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு பப்பாளி பழத்தில் இருந்து கூழ் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆலையில் 10-க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இங்கு பப்பாளி ராட்சத தொட்டிகளில் ஊறவைத்து, மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றப்படுகிறது. பீடா, தேங்காய் பன் ஆகியவற்றில் இடம் பெறும் பப்பாளித் துண்டுகளாக இவை பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக 15 அடி ஆழமுள்ள 4 ராட்சத தொட்டிகளில் பப்பாளி காய்கள் வேதிப்பொருளுடன் ஊறவைக்கப்படுகின்றன. இங்கு ஒடிசாவைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை ரோஹித் திகல்(27), அருணா கோமங்கோ(29) ஆகியோர் பணியில் இருந்தபோது, எதிர்பாராதவிதமாக தொட்டியில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த உடுமலை தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று இருவரையும் மீட்டனர். பின்னர் அவர்கள் உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். இதுகுறித்து உடுமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், வட்டாட்சியர் கவுரிசங்கர் மற்றும் வருவாய் துறையினர் ஆய்வு மேற்கொண்டு, ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர்.