மதுரை; ‘எல்லை’ எடுத்துக் கொடுக்காமல் மாநில நெடுஞ்சாலைத் துறை கடந்த 4 ஆண்டுகளாக இழுத்தடித்து வருவதால், வைகை ஆறு ‘ஸ்மார்ட் சிட்டி’ சாலை முழுமையாக நிறைவேற்றப்படாமல் முடங்கிபோய் கிடக்கிறது. உள்ளூர் அமைச்சர்கள், இந்த விவகாரத்தில் நீடிக்கும் சிக்கல்களை முடிக்க ஆர்வம் காட்டாமல் இருப்பதால், ரூ.381.41 கோடியில் போட்ட இந்தச் சாலையை மக்கள் முழுமையாக பயன்படுத்த முடியவில்லை.
கடந்த அதிமுக ஆட்சியில் மதுரை மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், வைகை வடகரை மற்றும் தென்கரை நகரச்சாலைகளை எளிதாக கடக்கவும் வைகை ஆற்றின் கரையில் இருபுறமும் சாலை அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. மாநகராட்சி சார்பில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் ரூ.81.41 கோடியும், நெடுஞ்சாலைத் துறை (தேசிய நெடுஞ்சாலைத் துறை அலகு) சார்பில் ரூ.300 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்து வைகை ஆற்றின் இரு கரைகளிலும் சாலை அமைக்கப்பட்டது. அடிப்படையில் வைகை ஆற்றின் இரு புறமும் உள்ள ஏற்கெனவே இருந்த சாலை, மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமானது.
மாநகராட்சி, தங்களுடைய ‘ஸ்மார்ட் சிட்டி’ நிதியில், நகர போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக நகர்பகுதியில் குருவிக்காரன் சாலை முதல் ராஜா மில்சாலை சாலை வரை வைகை ஆற்றின் இரு புறமும் மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு உதவும் வகையில் 6.கி.மீ., தொலைவுக்கு இந்த சாலையை அமைத்துக் கொடுத்தது. ஆனால், மாநில நெடுங்சாலைத் துறை (தேசிய நெடுஞ்சாலைத்துறை அலகு) அமைக்க வேண்டிய இரு இடங்களில் இந்த வைகை கரை சாலை, இன்னும் முழுமை அடையாமல் இந்த திட்டம் முடங்கிப்போய் கிடக்கிறது.
வடகரையில் குருவிக்காரன் சாலை மேம்பாலத்தில் இருந்து அண்ணாநகர் தெப்பக்குளம் இணைப்பு பாலம் வரை இன்னும் இந்த வைகை கரை சாலை போடப்படவில்லை. அதுபோல், தென்கரையில் மங்கையர்கரசி பள்ளி அருகே ரயில்வே மேம்பாலம் பகுதியில் ஆரப்பாளையம் ரவுண்டான இணைக்கும் பகுதி வரை வைகை தென்கரை சாலை முழுமையாக போடவில்லை.
அதனால், ஆரப்பாளையத்தில் இருந்து தென்கரை சாலையில் வரக்கூடிய வாகனங்களும், வைகை வடகரையில் விரகனூர் ‘ரிங்’ ரோடு பாலத்தில் இருந்து வரக்கூடிய வாகனங்களும், ரூ.381.41 கோடியில் போட்ட இந்த பிரம்மாண்ட சாலையை தொடர்ச்சியாக பயன்படுத்த முடியவில்லை. அதனால், வைகை கரை சாலையில் ஒரு புறமும் பளபளக்கும் சாலையாகவும், மற்றொரு புறம் தொடர்ச்சியாக இல்லாமல் துண்டாகி பாதாள பள்ளமாகவும் உள்ளன.
அதேபோல், இந்த சாலைகளில் நெடுஞ்சாலைத்துறை பல இடங்களில் மழைநீர் வடிகால் அமைக்கவில்லை. அதனால், மழைநீர் செல்ல முடியாமல் மழைக்காலத்தில் வைகை கரையோரம் உள்ள குடியிருப்புகள் தத்தளிக்கிறது. சுமார் 8 ஆண்டாக நடக்கும் இந்த வைகை கரை சாலை திட்டம் தற்போது வரை முழுமையாக நிறைவு அடையாததால், இந்த திட்டத்திற்கு ஒதுக்கிய கோடிக்கணக்கான நிதி வீணாகி உள்ளதோடு, மாநகர நெரிசலையும் குறைக்க இந்த வைகை கரை சாலை துளியும் உதவவில்லை.
உள்ளூரில் இரு அமைச்சர்கள் இருந்தும், அவர்கள் இந்த திட்டத்தில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு கண்டு இந்த சாலையை முழுமையாக போட நடவடிக்கை எடுக்கவில்லை. நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் (தேசிய நெடுஞ்சாலைத்துறை அலகு) கூறுகையில், ‘‘குருவிக்காரன் சாலை மேம்பாலத்தில் இருந்து அண்ணாநகர் தெப்பக்குளம் இணைப்பு பாலம் வரை மாநில நெடுஞ்சாலைத்துறை ‘எல்லை’ எடுத்து என்ஓசி கொடுக்க வேண்டிய உள்ளது. நாங்கள் அப்பகுதியில் சாலை போடுவதற்கு ரூ.56 கோடியில் திட்டமதி்ப்பீடு தயார் செய்து வைத்துள்ளோம். அவர்கள் ‘எல்லை’ எடுத்து கொடுத்ததும் சாலை போடும் பணி தொடங்கிவிடுவோம்,’’ என்றார்.