சுங்கச்சாவடி கட்டணங்களை உயர்த்தினால் மட்டும் போதாது

தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளின் கட்டணம் உயர்த்தப்பட்டு, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இதில் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 8 சுங்கச் சாவடிகளும் அடங்கும். சமீபத்தில் பணிகள் முடிந்தவை, பணிகள் நிலுவையில் இருப்பவை என சில சுங்கச் சாவடிகளை தவிர, மற்றவற்றில் ரூ.5 முதல் ரூ.25 வரை கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கும் என்று பலரும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

நாடு முழுவதும் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 145 கி.மீட்டர் தொலைவுக்கு நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. 4 வழி, 6 வழி, 8 வழிச்சாலை என்ற மூன்று விதமாக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 1,228 சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டு கட்டண வசூல் நடக்கிறது. தமிழகத்தில் 5,381 கி.மீட்டருக்கு சாலை அமைக்கப்பட்டு 78 சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், மக்களின் போக்குவரத்துக்கும் சாலை கட்டமைப்பு அவசியமானது என்றாலும், சுங்கச் சாவடி கட்டணங்கள் உயரும்போது, சரக்கு போக்குவரத்தின் செலவு அதிகரித்து விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும் என்ற கருத்தை புறந்தள்ளிவிட முடியாது. நாட்டின் வளர்ச்சிக்கு போக்குவரத்து கட்டமைப்பை வலுப்படுத்துவதுடன், மக்களும் பாதிக்கப்படாத வகையில் கட்டண உயர்வுகளை நிர்ணயிப்பது அரசின் பொறுப்பாகும்.

நெடுஞ்சாலைகளில் வெளியேறும் வழிகளில் முறையான விளக்கு வசதிகள் இருப்பதில்லை, கால்நடைகள் நெடுஞ்சாலைகளுக்குள் வராமல் இருக்க தடுப்புகள் அமைக்கப்படுவதில்லை, சர்வீஸ் சாலைகளில் உள்ள குப்பைகள் அகற்றப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் வாகன ஓட்டிகளிடம் இருந்து முன்வைக்கப்படுகிறது. பராமரிப்பு கட்டணம் வசூலிக்கும்போது இதுபோன்ற வசதி களையும் உருவாக்கித் தருவது நிர்வகிப்பவர்களின் கடமை.

முன்பெல்லாம் தமிழகத்தில் பல ஊர்களில் உள்ள சாலைகளின் இருமருங்கிலும் மரங்கள் சூழ்ந்து, அந்த சாலைகளில் பயணிக்கும்போது, குளுகுளுவென ரம்மியமான சூழலை அனுபவிக்க முடியும். அத்தகைய சாலைகள் 4 வழி, 6 வழிச்சாலைகளாக மாற்றப்பட்ட பின், அங்கிருந்த மரங்கள் வெட்டப்பட்டு நெடுஞ்சாலைகள் பொட்டல் காடாக காட்சியளிக்கின்றன. நீதிமன்றங்கள் தலையிடும்போது, ஒரு லட்சம் மரங்களை வெட்டினோம்; 5 லட்சம் மரங்களை வைத்து விட்டோம் என்று கணக்கு காட்டி விடுகின்றனர்.

நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்படும் சொற்ப செடிகளையும் மாடு மேய்ந்து விடும் நிலையே உள்ளது. இந்திய சாலை அமைப்பு (IRC) 2021 முடிவின்படி, நெடுஞ்சாலைகளில் ஒரு கி.மீட்டருக்கு 999 மரக்கன்றுகள் நடப்பட வேண்டும். இவற்றை 3 ஆண்டுகள் பராமரிக்க நெடுஞ்சாலைத்துறை ரூ.1,700 என வரையறுத்துள்ளது. ஆனால், ரூ.3,500 செலவாகும் என்பதால் பராமரிக்க ஒப்பந்ததாரர்கள் முன்வருவதில்லை. இப்பிரச் சினையை தீர்க்க, மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க தனி ஆணையத்தை நெடுஞ்சாலைத்துறை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது.

சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தாமல், வெட்டப்படும் மரங்களை ஈடுசெய்ய இதுபோன்ற புதிய முயற்சிகளை மேற்கொண்டு, நெடுஞ்சாலைகளில் பசுமை சூழலை கொண்டு வருவதற்கான நடவடிக்கையையும் நெடுஞ்சாலைத்துறை மேற்கொள்ள வேண்டும்.