சென்னை: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் அரசுடமையாக்கப்பட்ட விவகாரத்தில் அதிமுக-திமுகவினருக்கு இடையே சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.
தமிழக சட்டப்பேரவையில் வருவாய்த் துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதத்தில் அதிமுக உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் (சிதம்பரம்) பேசும்போது, ‘‘சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் அதிமுக ஆட்சியில் அரசுடமையாக்கப்பட்டது.
ஆனால், அங்கு மருத்துவ வசதிகள் இன்னும் மேம்படுத்தவில்லை. இரவு நேரத்தில் நெஞ்சு வலி என்று போனால் கூட ஆஞ்சியோ செய்ய முடியாத நிலை உள்ளது. மேலும், விபத்தில் காயங்களுடன் வருபவர்களுக்கு ஒரு பரிசோதனைகூட எடுக்க முடியவில்லை.
அமைச்சர் மா.சுப்ரமணியன்: தனியாரிடம் இருந்த அந்த மருத்துவமனை அரசுடமையாக்கப்பட்டது. மருத்துவமனையில் பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டு, ரூ.12.98 கோடியில் புதிய கட்டிடங்கள் கட்டி திறந்து வைக்கப்பட்டுள்ளது. புதிய மருத்துவக் கருவிகள் வாங்கப்பட்டுள்ளது. காலியாக உள்ள 200 பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது.
எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன்: அவ்வளவு பெரிய மருத்துவமனையில் ஆஞ்சியோ செய்ய முடியவில்லை. இரவு விபத்தில் சிக்கி வருபவர்கள் சிகிச்சைக்காக நான் கூறுகிறேன். ஆனால், அமைச்சர் வேறு ஏதோ பதில் சொல்கிறார்.
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்: கடலுார் மாவட்டத்தில் புதிதாக மருத்துவக் கல்லூரி கட்ட கடந்த திமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது. அந்த மருத்துவமனையை நீங்கள் கட்டாமல் அப்படியே விட்டுவிட்டு தேவையில்லாமல், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லுாரியை அரசு கையகப்படுத்தியது. இப்போது பழியை எங்கள் மீது சுமத்துகிறீர்கள்.
(அப்போது அதிமுக உறுப்பினர் விஜயபாஸ்கர் பாய்ண்ட் ஆப் ஆர்டர் கேட்டார். ஆனால், அவருக்கு பேரவைத் தலைவர் அனுமதி தரவில்லை. இதையடுத்து, அதிமுக உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கேட்டுக் கொண்டதற்காக விஜயபாஸ்கருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது).
அதிமுக எம்எல்ஏ விஜயபாஸ்கர்: அண்ணாமலை பல்கலைக்கழகம் சுயநிதி கல்லூரியாக இருந்தது. ஆண்டுக்கு ரூ.6 முதல் 9 லட்சம் வரை கட்டணம் பெற்று வந்தார்கள். அதைதான் அரசுடமையாக்கினோம்.
எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன்: கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கடல்நீர் ஊருக்கு புகுந்துவிடாமல் தடுக்க தடுப்பணை கட்ட வேண்டும். கடல்நீர் ஊருக்கும் புகுந்தால், வயல்கள் நாசமாகி விடுகின்றன. அதிமுக ஆட்சியில் பல்வேறு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து ஒரு மாவட்டம்கூட புதிதாக பிரிக்கவில்லை. சிதம்பரத்தை மையமாக கொண்டு, புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.