கச்சத்தீவை மீட்பதால் மட்டும் மீனவர்கள் பிரச்சினை தீருமா?

தேர்தல் நெருங்குவதாலோ என்னவோ மீண்டும் அரசியல் கட்சிகளுக்கு கச்சத்தீவு விவகாரம் விவாதப் பொருளாக மாறி இருக்கிறது. கச்​சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்த கதை ஒருபக்​கமிருக்க… கச்சத்தீவை மீட்டு​விட்டால் ஒட்டுமொத்த தமிழக மீனவர்​களின் பிரச்சினையும் ஒரே இரவில் முடிவுக்கு வந்து​விடும் என்பது போல் அனைத்துக் கட்சிகளும் பேசுகின்றன. ஆனால், கச்சத்தீவை மீட்பது மட்டுமே தமிழக மீனவர்​களுக்கு விடியலைத் தராது என்பதே கள யதார்த்தம் என்கிறார்கள்.

1974-ம் ஆண்டு ஜூன் 26-ல் போடப்பட்ட முதல் ஒப்பந்​தத்தில் கச்சத்தீவு இலங்கைக்கு விட்டுக்​கொடுக்​கப்​பட்டது. ஆனால், அந்த ஒப்பந்​தத்தின் 6-வது பிரிவில், ‘இரு நாட்டு மீனவர்​களும் கடல் எல்லை கட்டுப்​பாடுகள் இன்றி இரண்டு நாட்டு கடற் பிராந்​தி​யத்​துக்​குள்ளும் சென்றுவர அனுமதிக்​கப்​படு​வார்கள்’ என்ற ஷரத்தும் சேர்க்​கப்​பட்டது. அதேசமயம் 1976 மார்ச் 23-ல் கையெழுத்தான இரண்டாவது ஒப்பந்​தத்​தில், இரண்டு நாடுகளுக்​குமான கடல் எல்லைகள் வரையறுக்​கப்​பட்​டதுடன் ‘இரண்டு நாட்டினரும் தங்களுக்கு உரிமையான கடற் பகுதியில் இறையாண்மை உடையவர்கள்’ என்ற ஷரத்து சேர்க்​கப்​பட்டது.

இதுதான் தமிழக மீனவர்கள் இன்று அனுபவித்து வரும் பிரச்சினை​களுக்கு மூல காரணம். புதிய ஒப்பந்​தத்தின் மூலம், முந்தைய ஒப்பந்​தத்தில் இரு நாட்டு கடல் பிராந்​தி​யத்​திலும் மீனவர்​களுக்கு வழங்கப்​பட்​டிருந்த மீன் பிடிக்கும் சலுகைகள் மறுக்​கப்​பட்டன. ஆனால் ஒப்பந்தம் இப்படிச் சொன்னாலும்கூட, இரு நாட்டு மீனவர்​களும், தங்களுக்குள் இருந்த பரஸ்பர உறவு மற்றும் நட்பு காரணமாக, இரு நாட்டு கடல் பிராந்​தி​யத்​துக்​குள்ளும் சுதந்​திர​மாகச் சென்று மீன் பிடித்து வந்தனர்.

அவர்களின் இந்த ஒற்றுமைக்கு உலை வைத்தது இலங்கையில் நடந்த உள்நாட்டு போர். அதன் விளைவாக, 13.7.1983-ல் ராமநாத​புரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் முதன் முதலாக இலங்கை கடற்படை​யினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாகினர். இதில் 4 மீனவர்கள் படுகாயமடைந்​தனர். ஒருவர் உயிரிழந்​தார். அன்றைக்கு தொடங்கிய இலங்கைக் கடற்படையின் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் இன்னமும் நின்ற​பாடில்லை.

தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையின் தாக்குதல்கள் கச்சத்தீவு பகுதியில் மட்டுமே நடந்ததோ, நடப்பவையோ அல்ல. கச்சத்தீவு பகுதிக்கு வெகு தொலைவில் உள்ள புதுக்​கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடு​துறை, காரைக்கால் ஆகிய மாவட்ட மீனவர்​களும் பெருமளவில் பாதிக்​கப்​பட்​டிருக்​கிறார்கள். ஆக, தமிழக மீனவர்​களுக்கான தீர்வு என்பது கச்சத்​தீவுக்கு அப்பால் உள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தேசிய மீனவர் பேரவையின் தேசிய துணைத் தலைவர் டாக்டர் குமரவேலு, “கச்சத்தீவு நம்முடைய மண். அதை மீட்பது என்பது நமது கவுரவ பிரச்சினை. ஆனால், அது மட்டுமே நமது மீனவர்​களின் பிரச்சினைக்கு தீர்வைத் தந்து​வி​டாது. காரைக்கால் மற்றும் தமிழகத்தின் பெரும்​பகு​தியான மீனவர்கள் கச்சத்தீவை ஒட்டிய பகுதி​களில் மீன்பிடிக்கச் செல்லும் வாய்ப்பு கிடையாது.

1974 ஒப்பந்​தத்​தின்படி எல்லை வரையறுத்துக் கொடுக்​கப்பட்ட இலங்கை கடல் பகுதியை ஒட்டிய கடல் எல்லையில் தான் நமது மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டிய சூழல் இருக்​கிறது. அங்கு தான் மீன் வளமும் இருக்​கிறது. ஆழம் நிறைந்த பகுதியும் துவங்கு​கிறது.

இலங்கை கடற் பகுதியை ஒட்டி மீன் பிடிக்​காமல் இருப்பதை தவிர்க்கவே இந்திய தமிழ் மீனவர்கள் இலங்கையின் வடக்குப் பகுதிக்​கும், கிழக்கு பகுதிக்கும் சென்று மீன் பிடிக்க வேண்டிய சூழல் உருவாகிறது. அது ஆழ்கடல் மீன்பிடிப்​புக்கு உகந்த மீன் வளம் நிறைந்த பகுதி​யாகும். ஆனால், கச்சத்தீவு பகுதி என்பது மீன்பிடிக்க மிகவும் முக்கி​யத்துவம் வாய்ந்த பகுதி அல்ல. எனவே, நமது மீனவர்கள் பிரச்சினைக்கான தீர்வு கச்சத்தீவு மட்டுமல்ல.

இரு நாட்டு மீனவர்​களும் பரஸ்பரம் கடல் எல்லைகளைக் கடந்து, இரு நாடுகளின் கடல் பரப்பிலும் மீன்பிடிப்​ப​தற்கான நிரந்​தரமான புதிய ஒப்பந்​தத்தை உருவாக்குவது மட்டுமே நமது மீனவர்​களுக்கும் இலங்கை மீனவர்​களுக்​குமான பிரச்சினைகளை தீர்க்க ஒரே வழி. அது ஒன்றுதான் இத்தனை மாவட்ட மீனவர்​களின் பிரச்சினைகளை தீர்க்கும் வழியு​மாகும்” என்றார். பிரதமர் மோடி கச்சத்தீவை இலங்கை​யிடம் 50 வருட குத்தகைக்கு எடுக்கப் போகிறார் என்று செய்திகள் வரும் நிலையில், டாக்டர் குமரவேலு சொல்லும் இந்த உபாயத்தையும் கவனத்தில் கொண்டால் நல்லது!