இந்த ஐபிஎல் சீசனில் முதல் 2 ஆட்டங்களையும் தோல்வியுடன் தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 3-வது போட்டியில் வெற்றியைச் சுவைத்து எதிரணிகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளது. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு முக்கிய காரணகர்த்தாவாக இருந்தவர் இளம் வீரர் அஸ்வனி குமார். பஞ்சாபைச் சேர்ந்த இந்த இளம் வீரர்தான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்களை சிதறடித்து அணிக்கு வெற்றித் தேடித் தந்துள்ளார்.
மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற 3-வது போட்டியில் மும்பை அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது. இந்த ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலத்தின்போது அடிப்படை விலையான ரூ.30 லட்சத்துக்கு வாங்கப்பட்டவர்தான் அஸ்வனி குமார். முதல் 2 போட்டிகளில் இவரை மறைத்து வைத்திருந்த மும்பை அணி நிர்வாகம், 3-வதுபோட்டியில் அறிமுகம் செய்தது. தனது முதல் போட்டியிலேயே 4 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்தார் அஸ்வனி குமார். கொல்கத்தா அணியின் கேப்டன் அஜிங்கிய ரஹானே,ரிங்கு சிங், மணீஷ் பாண்டே, ஆந்த்ரே ரஸல் ஆகியோரை சாய்த்து, கொல்கத்தா அணியை தோல்வியுறச் செய்தார்.
4 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் தனது அறிமுக போட்டியிலேயே சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த இந்திய வீரர்கள் பட்டியலிலும் அஸ்வனி இணைந்துள்ளார். மேலும், ஐபிஎல் போட்டியில் தான் வீசிய முதல் பந்திலேயே விக்கெட்டைக் கைப்பற்றிய மும்பை வீரர்கள் பட்டியலிலும் அஸ்வனி இணைந்துள்ளார். இதற்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் அலி முர்டாசா, அல்சாரி ஜோசப், டெவால்ட் பிரேவிஸ் ஆகியோரும் தங்களது முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.
மொஹாலியிலிருந்து மும்பை அணிக்கு வந்துள்ள, அஸ்வனி குமார் மும்பை அணியின் துருப்புச்சீட்டாக மாறியுள்ளார். இந்த நிலைக்கு வருவதற்கு அவர் ஏராளமான தடைகளை கடந்து வந்திருக்கிறார். பஞ்சாபின் மொஹாலி மாவட்டத்திலுள்ள ஹான்ஜேரி என்ற குக்கிராமத்தில் இருந்து வந்தவர் இன்று நாடே கொண்டாடப்படும் இளம் கிரிக்கெட் வீரராக மாறியிருக்கிறார். இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருதைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அணி நிர்வாகத்தின் நம்பிக்கைக்குரிய செல்லப் பிள்ளையாகவும் மாறியுள்ளார்.
இதுகுறித்து அஸ்வனி குமார் கூறும்போது, “இந்தப் போட்டியில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய விஷயம். இதை ஒருபோதும் நினைத்துப் பார்க்கவில்லை, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
என்னுடைய கடின உழைப்பு, கடவுளின் அருளால் இங்கு வந்தேன். என்னால் சிறப்பாகப் பந்துவீச முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் பதற்றமாகவும் இருந்தது. என்ன நடக்குமோ என்ற பதற்றத்தோடு இருந்தேன். இதனால் பிற்பகல் நேரத்தில் சாப்பிடக்கூட இல்லை. வெற்றிக்
காக கடுமையாக உழைத்தேன். எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி என் ஊர் மக்களை பெருமை கொள்ள செய்வேன்” என்றார்.
இதற்கு முன்பு 2022-ம் ஆண்டு சையத் முஷ்டாக் அலி தொடரில் அறிமுகமான அஸ்வனி 4 போட்டிகளில் மட்டும் விளையாடினார். இதில் 3 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அதுமட்டுமின்றி இவர் 2 முதல் தரப் போட்டிகளிலும், 4 லிஸ்ட் ஏ போட்டிகளிலும் விளையாடியிருக்கிறார். இவர் முதன் முதலாக பஞ்சாப் டி20 தொடரில் ஷெர் இ-பஞ்சாப் அணிக்காக விளையாடினார். அதில், பிஎல்வி பிளாஸ்டர் அணிக்காக விளையாடி 4 விக்கெட்டை வீழ்த்தினார்.
அங்கிருந்துதான் மும்பை அணி நிர்வாகத்தால் கண்டெடுக்கப்பட்டு இன்று ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியில் நுழைந்துள்ளார். முன்னதாக பஞ்சாப் மாநில அணியின் பேக்-அப் பவுலராக இருந்தார்.
ஏலத்தின்போது கொல்கத்தா, சென்னை ராஜஸ்தான் அணிகளால் முதலில் இவர் நிராகரிக்கப்பட்டார். ஆனால், அஸ்வனியின் பந்துவீச்சு மீது மும்பை நிர்வாகம் நம்பிக்கை வைத்திருந்தது. அதை தற்போது காப்பாற்றிக் கொண்டுள்ளார் அஸ்வனி.
மும்பையின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா விளையாடாத நிலையில் அஸ்வனி குமார் தனது திறமையை நிரூபித்துள்ளார்.
அஸ்வனி குமாரின் வெற்றி குறித்து அவரது தந்தை ஹர்க்கேஷ் குமார் கூறும்போது, “அனல் பறக்கும் வெயிலானாலும் சரி, கடும் மழையாக இருந்தாலும் சரி.. ஒருநாளும் கிரிக்கெட் பயிற்சியை அஸ்வனி தவற விட்டதே இல்லை. மொஹாலியிலுள்ள கிரிக்கெட் மைதானத்துக்கு சைக்கிளில் சென்று விடுவார். தற்போது முலான்பூரிலுள்ள புதிய மைதானத்துக்கு தவறாமல் செல்கிறார் அஸ்வனி. அவரது விடா முயற்சிக்குக் கிடைத்த வெற்றிதான் மும்பை அணியில் இணைந்தது. இன்றைய ஆட்டத்தின் மூலம் தனது திறமையை உலகம் முழுவதற்கும் அறிவித்துவிட்டார் அஸ்வனி.
சைக்கிள் இல்லாதபோது, மைதானம் வழியாக இரு சக்கர வாகனங்களில் வருவோர், போவோரிடம் லிப்ட் கேட்டு சென்று விடுவார். எந்த வாகனமுமே கிடைக்காவிட்டால் ஷேர் ஆட்டோக்களில் சென்றுவிடுவார். தினந்தோறும் மொஹாலி மைதானத்துக்கு செல்ல ரூ.30 மட்டுமே என்னிடம் பெற்றுச் செல்வார்.
இன்று அவர் ரூ.30 லட்சத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு சாதித்துள்ளார். பயிற்சியை முடித்துவிட்டு இரவு 10 மணிக்கு வீட்டுக்கு வரும் அஸ்வனி மறுநாள் காலை 5 மணிக்கு எழுந்து மீண்டும் பயிற்சிக்குச் செல்வார்” என்றார்.
அஸ்வனி குமாரின் அண்ணன் ஷிவ் ராணா கூறும்போது, “கிரிக்கெட் பயிற்சியை அஸ்வனி பெறுவதற்கு அஸ்வனியின் நண்பர்கள் உதவி செய்வர். ரூ.30 லட்சத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டதும், அந்தத் தொகையின் ஒரு பகுதியை எடுத்துச் சென்று எங்கள் கிராமத்துக்கு அருகிலுள்ள பல்வேறு கிரிக்கெட் அகாடமிகளுக்கு இலவசமாக கிரிக்கெட் பந்துகள், மட்டைகளை வாங்கிக் கொடுத்தார்” என்றார்.
மும்பை இந்தியன்ஸ் அணி, பல்வேறு நட்சத்திர வீரர்களை இந்திய அணிக்காக உருவாக்கிக் கொடுத்துள்ளது. ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா உள்ளிட்ட திறமையான வீரர்களை மும்பை உருவாக்கிக் கொடுத்த வரலாற்றை நாம் அறிவோம். தற்போது அந்த வரிசையில் அஸ்வனி குமாரும், தேசிய அணிக்காக விளையாடும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள்.