சென்னை: தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, அவரது மகனும் பெரம்பரலூர் மக்களவை தொகுதி எம்.பி.யுமான அருண் நேரு, அமைச்சரின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் மற்றும் அமைச்சரின் சகோதரி ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் இன்று (திங்கள்கிழமை) காலை தொடங்கி அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் இச்சோதனை நடைபெற்று வருவதாகத் தெரிகிறது. அமைச்சரின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரனின் வங்கிப் பரிவர்த்தனைகளின் அடிப்படையில் அமலாக்கத் துறை சோதனை நடைபெறுவதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் 10 இடங்களில்.. சென்னையில் மட்டும் அடையாறு, தேனாம்பேட்டை, சிஐடி காலனி, எம்.ஆர்.சி.நகர் உள்ளிட்ட 10 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. கோவையில் அமைச்சரின் சகோதரர் மணிவண்ணனுக்குச் சொந்தமான கட்டுமான நிறுவனம் இருப்பதாகவும், அது தொடர்பாக சிங்காநல்லூர், அவினாசி சாலை, மசக்காளி பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேபோல் திருச்சி தில்லை நகரில் உள்ள அமைச்சரின் வீடு, அவரது சகோதரி வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. அனைத்து இடங்களிலும் மத்திய ரிசர்வ் போலீஸார் பாதுகாப்புடன் சோதனை நடைபெற்று வருகிறது. திருச்சி தில்லை நகரில் அமைச்சர் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தத் தொடங்கியவுடன் அங்கு திமுக தொண்டர்கள் திரண்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு அவர்கள் அமைதி காக்கும்படி அறிவுறுத்தப்பட்டதின் பேரில் தற்போது சோதனை பலத்த பாதுகாப்புடன் நடந்து வருகிறது.
திமுக ஷாக்! தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வரும் சூழலில் திமுக மூத்த அமைச்சர், அவரது மகன், சகோதரர், சகோதரி வீடுகள், தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையின் மேற்கொண்டுள்ள இந்த அதிரடி சோதனை கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே திமுக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, துரை முருகன், பொன்முடி எனப் பலரும் அமலாக்கத் துறை, வருமான வரித் துறை ரெய்டுகளை சந்தித்துவிட்ட நிலையில் மற்றொரு மூத்த அமைச்சர் வீடு, தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெறுகிறது.