புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த நடிகர் ரவிக்குமார் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 71. மலையாள நடிகரான ரவிக்குமார், அங்கு, உல்லாச யாத்ரா, அம்மா, லிசா, சர்ப்பம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர், கே.பாலசந்தர் இயக்கிய ‘அவர்கள்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இதில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோருடன் அவர் நடித்தார். தொடர்ந்து, ‘பகலில் ஒரு இரவு’, ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’, ‘மலபார் போலீஸ்’, ‘சிவாஜி’ உட்பட தமிழ், மலையாளத்தில் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ‘பகலில் ஒரு இரவு’ படத்தில் தேவியுடன் இவர் நடித்த ‘இளமை எனும் பூங்காற்று’ பாடல் பிரபலமானது.
சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்த இவர், கடந்த ஒரு வருடமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவரது உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்கு இன்று நடக்கிறது. மறைந்த நடிகர் ரவிக்குமாருக்கு கல்பனா என்ற மனைவி வசந்த் என்ற மகன் உள்ளனர்.