ராமேசுவரம்: அந்நிய செலாவணி முறைகேட்டில், ராமேசுவரத்தில் அக்னி தீர்த்தம் கடற்கரை அருகே 60 அறைகளுடன் செயல்பட்டு வந்த நட்சத்திர விடுதி மற்றும் நிலத்தையும் கையகப்படுத்தி அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
மேற்கு வங்கத்தில் டிபி குளோபல் பிக்ஸ் என்ற பெயரில் அந்நிய செலாவணி வர்த்தக நிறுவனம் துவங்கி, வர்த்தக முதலீடுகளில் அதிக வருமானம் தருவதாக பொது மக்களிடம் முதலீடுகளை பெற்று மோசடியில் ஈடுபட்டதாக கொல்கத்தா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், இந்திய ரிசர்வ் வங்கியிடம் டிபி குளோபல் பிக்ஸ் நிறுவனம் அந்நிய செலாவணி வர்த்தகத்துக்கு எந்த அங்கீகாரமும் பெறவில்லை என்பது தெரியவந்தது.
இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நாடு முழுவதும் உள்ள டிபி குளோபல் பிக்ஸ் நிறுவனங்களில் விசாரணை மற்றும் அதிரடி சோதனை நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக பகுதியாக ராமேசுவரம் அக்னி தீர்த்தம் கடற்கரை அருகே டிபி குளோபல் பிக்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான 60 அறைகள் கொண்ட நட்சத்திர விடுதி மற்றும் அதன் நிலத்தையும் அமலாக்கத் துறை கையகப்படுத்தி உள்ளது.