Site icon Metro People

பெண்ணை இழிவாக பேசி மிரட்டிய பாஜக பிரமுகர்.. வைராலன வீடியோ.. தேடுதல் வேட்டையில் காவல்துறை

தன் அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் பெண் ஒருவரை இழிவாக பேசி தகராறு செய்த பாஜக பிரமுகரை உத்தரப் பிரதேச காவல்துறை கைது செய்ய தேடி வருகிறது. இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள கிராண்ட் ஓமாக்சே என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஸ்ரீகாந்த் தியாகி என்ற நபர் வசித்து வருகிறார். இவர் பாஜகவில் கிசான் மோர்ச்சா பிரிவில் பொறுப்பில் உள்ளார். இவர் தனது அடுக்கு மாடி குடியிருப்பில் கீழ் பகுதியில் உள்ள பொது இடத்தில் மற்றவர்களின் விருப்பங்களை மீறி மரம் நடுதல் போன்ற ஆக்கிரமிப்பு செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

கீழ் தளத்தில் வசிப்பவர்களுக்கு இது இடையூறாக உள்ளதாக கூறப்படும் நிலையில், கீழ் தளத்தில் வசிக்கும் பெண் ஒருவர் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பாஜக பிரமுகரிடம் குடியிருப்பு வாசலில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இடையூறாக இருக்கும் அந்த செடி கொடிகளை அகற்றக் கோரி அந்நபரிடம் கேட்ட நிலையில், அதற்கு அந்த பெண்ணை பாஜக பிரமுகர் கடுமையாக பேசியும், இழிவாக திட்டியும் வசைபாடியுள்ளார். செடி மீது கை வைத்தால் நான் உன்னைப் பார்த்துக்கொள்கிறேன் என்ற தொனியில் மிரட்டியுள்ளார். பாஜக பிரமுகர் அந்த பெண்ணை இழிவாக பேசுவதை அருகே உள்ள நபர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள நிலையில் அது வைரலாகி வருகிறது.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட பாஜக பிரமுகரை கைது செய்ய போலீசார் விரைந்துள்ளனர். இவர் தற்போது தலைமறைவாக உள்ள நிலையில், அவரை தேடி வருவதாக நொய்டாவின் கூடுதல் துணை காவல் ஆணையர் அங்கிதா தியாகி தெரிவித்துள்ளார். மேலும் பாஜக பிரமுகரின் மனைவி, சகோதரர் உள்ளிட்ட நான்கு பேரை பிடித்து காவல்துறை விசாரித்து வருகிறது.

காவல்துறை அந்த நபர் மீது எஃஐஆர் பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சம்பவம் தொடர்பாக விரைந்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Exit mobile version