சென்னை: செல்வமகள் திட்டத்தின் கீழ் 74,332 பெண் குழந்தைகளுக்கு சேமிப்பு கணக்கு தொடக்கம்

சென்னை: 2024-25-ம் நிதியாண்டில் சென்னை நகர அஞ்சல் மண்டலத்தில் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில், 74,332 பெண் குழந்தைகளுக்கு சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, சென்னை நகர மண்டல அஞ்சல்துறை தலைவர் ஜி.நடராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெண் குழந்தைகளின் நலனுக்காக மத்திய அரசு செல்வமகள் சேமிப்புத் திட்டத்தை கடந்த 2015-ம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து 2025 மார்ச் 31-ம் தேதி வரை சென்னை மண்டலத்தில் ரூ.9,234 கோடி வைப்புத் தொகையுடன 10.44 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கு இத்திட்டத்தில் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை அஞ்சல் மண்டலத்தில் சென்னை மாநகர் கோட்டங்கள், அரக்கோணம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, புதுச்சேரி ஆகிய பகுதிகள் அடங்கி உள்ளன. 2024-25-ம் ஆண்டில் மட்டும் இந்த மண்டலத்தில் இத்திட்டத்தில் 74,332 சேமிப்புக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம், வைப்புத் தொகையாக ரூ.1,798 கோடி பெறப்பட்டது. அதற்கு முந்தைய ஆண்டில் பெறப்பட்ட ரூ.1,564 கோடியை விட இது அதிகமாகும்.

முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது கடந்த நிதியாண்டின் வைப்புத் தொகை 14.96 சதவீதம் அதிகரித்துள்ளது. செல்வமகள் சேமிப்புத் திட்டக் கணக்குக்கு ஆண்டுக்கு 8.2 சதவீத அதிக வட்டியும், வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80சி-ன் கீழ் வைப்புத் தொகைகளுக்கு வருமான வரி விலக்கும் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ், 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரால் ஒரு நிதியாண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.250-ம் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் என்ற விகிதத்தில் சேமிப்புக் கணக்கைத் தொடங்கலாம். 18 வயதிலோ அல்லது உயர் கல்வி நோக்கங்களுக்காக 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகோ 50 சதவீத தொகையை திரும்பப் பெறலாம். கணக்கு தொடங்கிய நாளில் இருந்து 21 ஆண்டுகளுக்குப் பிறகு கணக்கு முதிர்ச்சியடையும்.

இத்திட்டம் தொடர்பான மேலும் விவரங்களுக்கு www.indiapost.gov.in என்ற அதிகாரபூர்வ இணைய தளத்தைப் பார்வையிடலாம். அல்லது அருகிலுள்ள தபால் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *