புதுடெல்லி: மின் வாகன உற்பத்தியாளரான ஜிதேந்திரா இ.வி. நிறுவனம் ஹைட்ரஜன், மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனத்தை தயாரித்து வருகிறது.
இதுகுறித்து ஜிதேந்திரா இ.வி.நிறுவனத்தின் இணை நிறுவனர் சாம்கிட் ஷா கூறியதாவது: அதிகரித்து வரும் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அதிவேக மற்றும் குறைவேக இருசக்கர மின் வாகனங்களை தயாரித்து வருகிறோம்.
2024-25 நிதியாண்டில் 4,200 வாகனங்களை விற்பனை செய்துள்ளோம். இப்போது 25 நகரங்களில் 100 விநியோகஸ்தர்கள் உள்ளனர். கூடுதலாக 100 விநியோகஸ்தர்களை நியமித்து வருவதால் நடப்பு நிதியாண்டில் விற்பனை இருமடங்காக அதிகரிக்கும்.
அடுத்த 5 ஆண்டுகளில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி திட்டங்களுக்காக ரூ.100 கோடி வரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம். இதுதவிர, உற்பத்தி மேம்பாட்டுக்காக மேலும் ரூ.25 கோடி செலவிட திட்டமிட்டுள்ளோம். இப்போது ‘ஹைட்ரிக்ஸ்’ என்ற பெயரில் புதிய மாடலை தயாரித்து வருகிறோம்.
இதை வரும் 2028-ல் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். இது ஹைட்ரஜன் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் வகையில் வடிவமைத்து வருகிறோம். ஒரு முறை சார்ஜ் செய்தால் 400 கி.மீ. தூரம் வரையிலும் மணிக்கு 120 கி.மீ. வரையிலும் பயணிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.