ஜெய்ப்பூர்: நடப்பு ஐபிஎல் சீசனின் 28-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 9 விக்கெட்டுகளில் வீழ்த்தியது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இதன் மூலம் இந்த ஆட்டத்துக்கு பிறகு புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறி உள்ளது ஆர்சிபி.
ஜெய்ப்பூரில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.13) அன்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. சஞ்சு சாம்சன் ரன் சேர்க்க தடுமாறினார். 19 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தார்.
ரியான் பராக் 30, ஜெய்ஸ்வால் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். 35 பந்துகளில் அரை சதம் எடுத்தார் ஜெய்ஸ்வால். ஹெட்மயர் 9 ரன்கள் எடுத்தார். பெங்களூரு தரப்பில் புவனேஷ்வர் குமார், யஷ் தயாள், ஹேசில்வுட் மற்றும் க்ருணல் பாண்டியா தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.
174 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆர்சிபி அணிக்கு பிலிப் சால்ட் மற்றும் விராட் கோலி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். சால்ட், 33 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார். கோலி, 45 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். தேவ்தத் படிக்கல், 28 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். 17.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்து ஆர்சிபி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் பச்சை நிற ஜெர்சி அணிந்து விளையாடியது ஆர்சிபி.
சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி-க்கு சோதனை: நடப்பு சீசனில் 6 ஆட்டங்களில் விளையாடி உள்ள ஆர்சிபி, 4 வெற்றி மற்றும் 2 தோல்வி அடைந்துள்ளது. இதில் கொல்கத்தா, சென்னை, மும்பை, ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில் ஆர்சிபி அணியின் சொந்த மைதானமான பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் குஜராத் மற்றும் டெல்லி தோல்வியை தழுவி உள்ளது. அந்த அணிந்த இந்த சீசனில் சொந்த மைதானம் சோதனையாக அமைந்துள்ளது.